Saturday, June 19, 2010

Disciple1

புதிய வாழ்க்கை முறை - சீஷர்களை உருவாக்குதல்

மக்கள் கிறிஸ்தவர்களானபோது, அவர்கள் மற்ற கிறிஸ்தவர்களோடு

தொடர்பு இல்லாமலோ, எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல் இல்லாமலோ

இருக்கவில்லை என்று அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் கூறுகிறது.

புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்கள் சபையில் சேர்ந்தபோது, தலைவர்களால் சீஷத்துவப் பயிற்சி பெற்றார் கள் என நாம் காண்கிறோம். ""அவர்கள் அப்போஸ் தலருடைய உபதேசத்திலும்...உறுதியாய் தரித்திருந்தார்கள்'' என அப்போஸ்தலர் 2:42ல் வாசிக்கிறோம்.

யாக்கோபு, பேதுரு, பவுல் ஆகியோர் கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கையை அடைந்துகொள்வது, வாழ்க்கை முறையிலே ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறது என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் இதைக்குறித்து எழுதும்போது, ஒரேவிதமான மனப்பான்மையையும், செயலையும் குறிக்கிறார்கள். களைந்துபோடு, அணிந்துகொள், கீழ்ப்படி, விழித்திருந்து ஜெபி, நில், நேசி என்பதுபோன்ற வாழ்க்கை முறையே புதிய விசுவாசிகளுக்கு மாதிரியாகும்.

பழைய சுபாவத்தைக் களைந்து போட்டு, புதிய சுபாவத்தை அணிந்து கொள்ளுங்கள்

தினமும் நம்டைய வஸ்திரத்தை மாற்ற வேண்டும், அழுக்கைக் களைய வேண்டும், பாவமான கிழிந்த வஸ்திரத்தை மாற்றி, தேவனுடைய கண்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய புதிய வஸ்திரத்தை அணிந்துகொள்ள வேண்டும் என அப்போஸ்தலருடைய வார்த்தைகள் போதிக்கின்றன. ""அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆயுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்'' எபேசியர் 4:22...24.

இந்த வசனத்தோடு கொலோசேயர் 3:9,10, யாக்கோபு 1:19-21 ஆகிய வசனங்களையும் ஒப்பிடுக.

தேவன் விரும்புகிற நேர்மையான வாழ்வானது நாம் ஒன்றுமே செய்யாமல் தானாகவே வந்துவிடாது. அதற்கான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டும். விசுவாசத்தோடு முன் செல்ல வேண்டும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் நம்பிக்கை வைக்கவேண்டும். களையவும், அணியவும் எடுக்கின்ற உறுதியான தீர்மானங்களின் மூலமே பரிசுத்தத்தில் வளரமுடியும். இது நன்றாக இருப்பதாக உணர்வதல்ல, அனுபவத்தில் நன்றாக இருப்பதாகும்.

தேவனுக்கு ஒப்புக்கொடு

புதிய கிறிஸ்தவ வாழ்க்கை முறையின் இன்னொரு பகுதி, தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதாகும். வேதத்திலுள்ள அவரு டைய வார்த்தைகளுக்கும், ஆவியானவரின் தூண்டுதலுக்கும், நமக்கு மேலாக தேவன் வைத்திருக்கும் அதிகாரங்களுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும்.

நாம் கிறிஸ்தவர்களாவதற்குமுன் கீழ்ப்படியாதவர்களாகவும், எதிர்த்து நிற்கிறவர்களாயுமிருந்தோம். ""நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒருவரும் எனக்குக் கூறத் தேவையில்லை! நான் என்ன செய்ய வேண்டுமென தீர்மானிக்கிறேனோ அதையே செய்வேன்'' என்பதே நம் மனப்பான்மையாக இருந்தது.

நமக்கு மேலான அதிகாரத்திலிருப்பவர்களுக்கு (அவர்கள் தவறுகளும், குறைகளும் உள்ளவர்களாக இருந்தாலும்) நாம் கீழ்ப்படிவதின் மூலம் நம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியும் படியாக நாம் தீர்மானிக்கிறோம். அப்படிச் செய்வதின்முலம் தேவன் நம்மை ஆளுகை செய்வதற்கு இடமளிக்கிறோம். நம்மை ஆளுபவர்கள் பூரணமானவர்களாக இல்லா விட்டாலும், தவறான முடிவுகளை எடுப்பவர்களாக இருந்தாலும், நம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் தேவன் நன்மையானவைகளைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடன் கீழ்ப்படிய வேண்டும்.

யார் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்று அப்போஸ்தலருடைய உபதேசம் கூறுகிறது. ""மனைவிகளே, கர்த்தருக்கேற்றபடி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்... பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது... வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து...'' கொலோ. 3:18...-22.

இத்துடன் எபேசியர் 5:21,24; 6:1, 5-8; 1 பேதுரு 2:13-18 ஆகிய வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

வேலைக்காரன் என்பதை ஊழியன் என்றும் பொருள் கொள்ளலாம்.

விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்

ஜெபத்தின் மூலம் மற்றவர்களுடைய வாழ்விலும் சூழ் நிலையிலும் நாம் தேவனுடைய ஆளுகையைக் கொண்டுவர முடியும் என அப்போஸ்தலர்களின் உபதேசம் கூறுகிறது. ""எல்லாவற்கும் முடிவு சமீபமயிருக்கிறது; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்'' 1 பேதுரு 4:7.

அனைத்து விதமான ஜெபங்கள்

""எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான் களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்'' எபேசியர் 6:18.

""உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக்கடவன்... உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக, அவர்கள் அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்'' யாக்கோபு 5:13-18.

புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள், ஜெபம் என்பது அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்வதல்ல, அது ஒரு கட்டளை என மிக உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றனர். தேவனோடு பேசுவது, கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கிய அம்சமாகும். ""எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.'' 1 தெசலோனிக்கேயர் 5:16-18.

முக்கியத்துவம்

""இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்'' கொலோ. 4:2.

கீழே ஜெபத்திற்காக சில ஆலோசனைகள் கொடுக்கப் பட்டுள்ளன:

சாதாரணமாக, இயற்கையாக தேவனோடு பேசுங்கள்

நீங்கள் இலக்கணமாக, பக்தியான மொழி நடையை பயன்படுத்தத் தேவையில்லை. தேவன் உங்கள் தகப்பன். எனவே அவரிடம் பேசும்போது நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டுமென அவர் விரும்புகிறார்.

உங்கள் விண்ணப்பங்கள் எதைக்குறித்தும், எல்லாவற்றைக் குறித்தும் இருக்கலாம். உங்கள் பரம பிதாவிற்கு எந்த ஒரு காரியமும் மிகச்சிறியதோ அல்லது மிகச் சாதாரண மானதாகவோ இருக்காது. ""நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்'' பிலிப்பியர் 4:6,7.

வேதாகம ஜெபங்களை பயன்படுத்துங்கள்

வேதாகம ஜெபங்களை பயன்படுத்தி ஜெபியுங்கள். இவை ஆவியானவரால் தூண்டப்பட்டவை என்பதால் நீங்கள் இவைகளைப் பயன்படுத்தும்போது, பிதாவின் சித்தத்தோடு இசைந்து ஜெபிக்கிறீர்கள் என உறுதியாக நம்பலாம். உதாரணமாக கர்த்தருடைய ஜெபம், ஒரு கூட்டு ஜெபம்: மத்தேயு 6:7-13, அப்போஸ்தலனாகிய பவுலின் ஜெபம்; எபேசியர் 3:14-21.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களைக் கூறி ஜெபிக்கலாம். நீங்கள் அதைச் செய்யும்போது ""கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடை கிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.'' லூக்கா 11:10 என்னும் பதிலைக் குறித்து உறுதியாயிருக்கலாம்.

""அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்'' மத்தேயு 9:35-38 என்னும் இயேசுவின் வாக்குத்தத்தத்தின்படி ஜெபியுங்கள்.

விசுவாசத்தோடு ஜெபியுங்கள்

தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு செவிகொடுக்கிறார் என்று நாம் உறுதியாயிருக்கலாம்: ""நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந் தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்'' 1 யோவான் 5:14,15.

தேவன் உங்கள் ஜெபங்களுக்குப் பதில் தருவார் என்று எதிர்பாருங்கள். அவருடைய வார்த்தையை நம்புங்கள்.

உறுதியாய் தரித்திருங்கள்

ஜெபத்தை விட்டுவிடாதிருங்கள். ஜெபத்தைக் குறித்ததான இயேசுவின் உவமைகளிலிருந்து உற்சாகம் பெறுங்கள். லூக்கா 11:5-10.

ஒரு கூட்டாளியோடு சேர்ந்து ஜெபியுங்கள்

சபைகளில் பிரச்சனைகளை நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் ஒருமனதோடு ஜெபிக்கும் நிலையில் இருக்கவேண்டுமென்று இயேசு கூறுகிறார். அவர் அந்த ஜெபத்திற்கு நிச்சயம் பதிலளிப்பார். ""உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப்போகிற எந்தக்காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகுமென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினால் எங்கே கூடியிருக் கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.'' மத்தேயு 18:19,20.

நில்லுங்கள்

சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று அப்போஸ்தலர்களாகிய பேதுருவும், பவுலும், யாக்கோபும் கூறுகிறார்கள்.

ஒரு கிறிஸ்தவ எழுத்தாளர் கூறுவதுபோல், ""ஆவிக்குரிய போராட்டம் ஒருவருடைய தனித்துவத்தையோ, வரங்களையோ அல்லது அழைப்பையோ பொறுத்ததல்ல. நாம் கிறிஸ்தவராகத் தீர்மானிக்கும்போது, நாமாகவே போராட்டக் களத்தில் நுழைகிறோம். அது, நாம் தேர்ந்தெடுப்பதல்ல, ஆவிக்குரிய போராட்டம், நாம் ஏற்கெனவே போராட்டக் களத்தில் இருக்கிறோம் என்பதை உணருவதிலிருந்து ஆரம்பிக்கிறது.''

வான மண்டலத்தின் இராஜ்ஜியம்

சாத்தானின் இராஜ்ஜியம் பூமியின்மேலுள்ள வான மண்டலத்தில் உள்ளது. அதனால்தான் அவன், ""வான மண்டலத்தின் அதிபதி'' என்று அழைக்கப்படுகிறான். நாம் கிறிஸ்துவுக்குள் வருமுன், நான் இந்த இருண்ட அதிபதியின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தோம். ""அக்கிரமங் களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத் திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப் படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக் கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள்'' எபேசியர் 2:1,2.

இயேசு இந்த உலகத்திற்கு வந்ததற்கான நோக்கங்களில் ஒன்று, சாத்தான் மேலும் அவனோடு வேலைசெய்பவர்கள் மேலும் முடிவான வெற்றிகொள்வதாகும். ""பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்'' 1 யோவான் 3:8.

சாத்தான் தொடர்ந்து தன்னுடைய அழிவு வேலையைச் செய்து வருகிறான். அதனால்தான் பிரச்சனைகளும் கோர நிகழ்ச் சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவனே, பாவத்துக்கும், வியாதிக்கும், சோதனைகளுக்கும், மரணத்துக்கும் காரணகர்த்தாவாயிருக்கிறான்.

நம் மனதில் இருந்து சத்தியத்தை திருடும், நம்மை நொறுக்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளும், தேவனுடைய காரியங்களைச் செய்யவிடாமல் நம்மைத் தடுக்கும் ""பொய்யனும், கொலை பாதகனுமாயிருக்கிறான்'' என்று இயேசு சாத்தானைக் குறித்து குறிப்பிடுகிறார்.

சாத்தானின் குறிக்கோள்

சாத்தானின் தற்போதைய குறிக்கோளானது, இயேசுவின் சீடர்களைக் காயப்படுத்துவதும், தேவனுடைய இராஜ் ஜியத்துக்கும் அவருடைய சபையின் வளர்ச்சிக்கும் எதிராகவும், தடையாகவும் செயல்படுவதாகும். அவன் தன் மனதில் அநேக திட்டங்களை, அதிலும் முக்கியமாக இளம் விசுவாசிகளுக்கு எதிராக வைத்துள்ளான். ""மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங் களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு'' எபேசியர் 6:12.

ஒவ்வொரு விசுவாசியும் சாத்தானின் தாக்குதலுக்கு இலக்காயிருக்கிறார்கள். இதற்காகவே, அப்போஸ்தலர்கள் ஒவ்வொரு விசுவாசியையும் விழிப்புடனிருந்து இந்த ஆவிக்குரிய தாக்குதலை எதிர்கொள்ளும்படி கூறுகிறார்கள்.

தேவனுடைய போராயுதங்கள் ""தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று எபேசியர் 6:13ல் பவுல் கூறுகிறார்.

ஒரு சில கிறிஸ்தவர்கள், ""தேவனுடைய போராயுதங்களைத் துண்டு துண்டாக ஒவ்வொரு நாளும் அணிகிறார்கள்''. மற்ற அப்போஸ்தலர்களும் பவுலுடன் இணைந்து, நாம் ஆவிக்குரிய பகைவனின் இலக்காக இருக்கிறோம் என வலியுறுத்துகிறார்கள்.

""தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனை எதிர்த்து நில்லுங்கள்'' என்று 1 பேதுரு 5:8,9ல் பேதுரு கூறுகிறார்.

சாத்தான்மேல் வெற்றி

""பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங் களை விட்டு ஓடிப்போவான்'' யாக்கோபு 4:7ல் இதேபோன்று யாக்கோபுவும் நம்மை எச்சரிக்கிறார். தீங்கு நாட்கள் வரும்போது, நாம் கீழ்க்கண்ட காரியங்களைச் செய்தால் நாம் சாத்தானின்மேல் வெற்றி காணலாம்.

அவன் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளுங்கள், அவனுடைய தாக்குதலுக்கு எதிர்த்து நில்லுங்கள், தேவன் தரும் போராயுதங்களைத் தரித்துக் கொள்ளுங்கள், சாத்தானிடம் பேச வேத வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள், அவனுடைய எல்லாத் திட்டங்களுக்கும் எதிர்த்து நில்லுங்கள்.

ஆவியானவர்தாமே, நாம் வெற்றிகொள்ள உதவிசெய்வார். ""உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.'' 1 யோவான் 4:4.

இயேசு நாம் ஒருவருக்கா மற்றொருவர் ஜெபிக்கும்படி கூறுகிறார். ""எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.'' மத்தேயு 6:13.

அன்பு

கிறிஸ்தவ அன்பு என்னும் கருப்பொருளானது, எபேசியர், கொலோசேயர், பேதுரு மற்றும் யாக்கோபு நிருபங்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

""ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருந்து... கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக் கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்'' எபேசியர் 4:32, 5:2.

""நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும், பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயையையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையை யும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால்...இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்'' கொலோசெயர் 3:12-14.

""உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேத வாக்கியம் சொல்லுகிற இராஜரீகப் பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்வீர்கள்.'' யாக்கோபு 2:8.

அன்பு ஒரு தீர்மானமாகும்! அது ஒரு சுயாதீனமான செயல்!

மனப்பூர்வமான அன்பு

""பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி'' என்னவென்று யாக்கோபு கூறுகிறார். அது விதவைகளையும், திக்கற்றவர்களையும் அவர்கள் துன்பத்தில் ஆதரித்தல், தினசரி உணவும் உடுத்த உடையும் இல்லாத கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு உதவிசெய்தல். யாக்கோபு 1:27; 2:14-17. பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவிசுவாசிகளைக் குறித்த ஒரு கருணை உள்ளத்தை அளிக்கிறார்.

உள்ளான தூண்டுதல்

நாம் இப்போது மறுபடியும் பிறந்திருப்பதினால் நமது சக கிறிஸ்தவர்களை உண்மையாக நேசிப்பதற்குப் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலைப் பெற்றிருக்கிறோம் எனப் பேதுரு கூறுகிறார். ""சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.'' 1 பேதுரு 1:22.

இந்த மனப்பூர்வ அன்பு வெளியே காட்டப்பட வேண்டும் என அவர் கூறுகிறார். ""ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள்'' 1 பேதுரு 5:14.

கிறிஸ்தவ அன்பானது, பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலைப் பெற்று, இயேசுவின் வாழ்க்கை, மற்றும் மரணத்தில் மாதிரியாகக் காட்டப்பட்டுள்ளது. அது உள்ளே ஆரம்பித்து, நடைமுறை உதவி, வாழ்த்துதல், அணைத்துக் கொள்ளுதல் மூலம் வெளியே காட்டப்படுகிறது.

இந்த அன்பு, சபையின் உள்ளேயும் வெளியேயுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அதாவது, விதவைகள், அநாதைகள், அகதிகள் மற்றும் ஏழைகளின் ஆவிக்குரிய, சரீரப் பிரகாரமான, மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தேவைகளைச் சந்திக்கிறது.

முடிவுரை

மாற்றப்பட்ட வாழ்க்கை

""நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.'' என்று பவுல் ரோமர் 12:2ல் கூறுகிறார்.

இந்த மாற்றம் என்றால் என்ன என்பதைக் குறித்து நாம் பார்த்தோம். ஆவிக்குரிய இந்த புதிய வாழ்க்கையானது, உலகத்தின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வாழ்க்கை முறையாகக் காட்டப் பட்டுள்ளது. அப்போஸ்தலர்கள் கூறுகிறபடி, இந்த புதிய வாழ்க்கைமுறை, தேவனுக்குள்ளாக புதிதாக வந்த மக்களின் கிறிஸ்தவக் கலாச்சாரமாகும்.

பழைய மற்றும் புது விசுவாசிகளைக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவேண்டும்.

பழைய மனிதனைக் களைந்துபோட்டு, புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

நேரிடையாக தேவனுக்கும், மறைமுகமாக, வீட்டில், சபையில் மற்றும் உலகத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.

பலவகையான ஜெபங்களை பயன்படுத்தி, விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.

நம்மை துன்பப்படுத்தி, சோதித்து, நம்மை விழச்இயேசு சாத்தானை, செய்வதற்கு நமது வாழ்க்கையைக் குறிவைக்கும் சாத்தானை எதிர்த்து நில்லுங்கள்.

தேவன் நமக்கு சர்வாயுதவர்க்கத்தை அளிக்கிறார். நாம் அணிந்துகொள்ள வேண்டும்.

ஒருவரையொருவர் வார்த்தையினாலும், கிரியை யினாலும், செய்கையினாலும், பரிசுகளினாலும் நேசியுங்கள். நாம் மற்றவர்களை நேசிக்கத் தீர்மானிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் இதை நடைமுறைப்படுத்த நமக்கு உதவி செய்கிறார்.

வீட்டுப்பாடம்

சரித்திரத்திலிருந்து ஒரு எச்சரிப்பு

1 சாமுவேல் 15:18--26 வாசியுங்கள்.

அதிகாரம், மற்றும் கீழ்ப்படிவதின் முக்கியத்துவம்

சாமுவேல் தீர்க்கத்தரிசி, சவுலின்மேல் தேவன் ஏற்படுத்திய அதிகாரமாய் இருந்தார். சவுல் ஜனங்களுக்குப் பயந்தவனும், சுதந்திர உணர்வு உடையவனுமாய் இருந்தபடியால், தீர்க்கத்தரிசியின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியவில்லை. சவுலின் கலகக்குணத்தை தேவன் நியாயந்தீர்த்து, அவனுடைய அதிகாரத்தை அவனைவிட்டு நீக்கினார்.

நமக்குமேல் அதிகாரத்திலுள்ளவர்கள் மூலமாக தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவதைக் குறித்து சாமுவேல் தீர்க்கத்தரிசி, 1 சாமு 15:22,23ல் கூறுவதைக் கவனியுங்கள்.

சீனாவிலிருந்த பரிசுத்தவானாகிய வாட்ச்மேன் நீ பின்வருமாறு கூறுகிறார்:

"" "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்' என்று ஏன் சாமுவேல் கூறினார்? ஏனெனில் பலி கொடுத்தலில்கூட சுயசித்தம் இருக்கலாம். கீழ்ப்படிதல் மட்டுமே தேவனை கனப்படுத்துகிறது. ஏனெனில், அது மட்டுமே தேவனுடைய சித்தத்தைத் தனது மையமாக எடுத்துக் கொள்ளுகிறது.

அதிகாரம் செயல்படுத்தப்பட கீழ்ப்படிதல் அவசியம்.தேவனுடைய பிள்ளைகளான நாம் சந்திக்க வேண்டிய முதல் காரியம் அதிகாரம். நாம் அதிகாரத்தை சந்தித்திருக்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்தே தேவனோடுள்ள நமது உறவு செயல்படுகிறது. நாம் சந்தித்திருப்போமானால், நாம் அதிகாரத்தை எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளலாம். நாம் அவ்வாறு தேவனால் உருவாக்கப்படும்போது, அவரால் பயன்படுத்தப்பட ஆரம்பிப்போம்.''

தேவன் உங்களுக்கு மேலாக யாரை வீட்டிலும், சபையிலும், பள்ளிக்கூடத்திலும், வேலையிடத்திலும் ஏற்படுத்தி யிருக்கிறார்? அவர்களைக்குறித்த மேலான உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஒருவரையொருவர் நேசியுங்கள்

இரண்டு பேரிடம் இப்பாடத்தில் கொடுக்கப்பட்ட ஒரு சில விதங்களில் உங்கள் அன்பை இந்த வாரத்தில் காண்பியுங்கள்.

ஜெபம்

ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்கும்படியாக உங்களை உற்சாகப்படுத்த இயேசு போதித்த உவமையை லூக்கா 18:1-8ல் வாசியுங்கள்.

No comments: