தாழ்மை
"நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." 1 பேதுரு 5:5
இந்த நவீன உலக வாழ்க்கையில் தாழ்மையாக நடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. தாழ்மையுள்ள மனிதர்களைப் பார்ப்பதும் மிகவும் அரிதாயிருக்கின்றது. எல்லா மனிதர்களும் மேட்டிமையுடனும் பெருமையுடனும் வாழ்வதைத் தான் பார்க்க முடிகின்றது. நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்கின்றார்கள். அதின் காரணமாக போட்டிகள் பொறாமைகள் நிறைந்து மனதில் சமாதானம், அன்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தாழ்ந்து போயிருந்தால் நிம்மதியோடு இருந்திருக்கலாம். நான் என்ற பெருமை, அகந்தை, மேட்டிமை அவர்களது கண்களைத் தடுத்து விட்டது.
வேதாகமத்திலும் தங்களுடைய மேட்டிமையான காரியங்களால் தங்களது சமாதனத்தைத் தொலைத்தவர்களில் சவுலையும் உசியா ராஜாவையும் பாருங்கள். சவுல் தன்னுடைய மேட்டிமையினால் போருக்குச் சென்ற இடத்தில் பலிகளை இட்டதினால் கர்த்தர் அவனுடைய சந்ததிக்கு ராஜ்யபாரத்தைக் கொடுக்கவில்லை. சவுல் தன்னுடையக் காலம் முழுவதும் தன் சந்ததிக்கு ராஜ்ஜியபாரம் கிடைக்காது என்று எண்ணி தாவீதைப் பின்தொடருவதிலேயேச் செலவிட்டான். உசியாவைப் பார்ப்போமானால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் மேட்டிமையாகி எருசலேம் தேவாலயத்திலே தூபக்கலசத்தை எடுத்துக் கொண்டுச் சென்று பலியிட்டதினால் கர்த்தருடையக் கோபத்திற்கு ஆளாகி குஷ்டரோகத்தைப் பெற்றுக் கொண்டான். காலம் முழுவதும் தனி அறையிலே தான் வாசம் செய்தான். மரணத்திற்குப் பிறகு கூட அவனை ராஜாக்களின் கல்லறையிலே வைக்கவில்லை. பரிதாபம்.
நாமும் இந்தப் பரிதாபத்திற்கு ஆளாக வேண்டுமா? சிந்திப்போம். கிறிஸ்து இயேசு நமக்குக் கற்றுத் தந்த தாழ்மையோடு வாழ்வோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சிந்தனை: "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" யாக்கோபு 4:6
No comments:
Post a Comment