Saturday, June 19, 2010

Turn to Jesus (Tamil)

மனம்திரும்பி, இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் அப்பொழுது
"உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்"





"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் துன்பப்படுகிற ஒவ்வொருவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்.

மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் மிகவும் துன்பப்பட்டு, கடினமாய் உழைத்து பணத்தை சேர்க்கிறோம். பின்பு, நமக்கு பிரியமான வழிகளில் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க செலவழித்து மகிழ்கிறோம். ஒரு சிலர் இரக்கமுள்ள மனதோடு அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நன்கொடை கொடுத்து ஏதோ தங்களால் ஆன சிறு நன்மையை செய்தோம் என்று திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால், நல்லவர் வாழ்விலும், தீயவர் வாழ்விலும் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருகின்றது.

வாழ்க்கையில் இன்பம் வரும்போது சில சமயம் கடவுளையே மறந்து விடுகிறோம். துன்பம் வரும்போது சுய இரக்கத்தினால் நிறைந்து கண்ணீரோடு கடவுளிடம் துன்பங்கள் நீங்க வேண்டுமென்று வேண்டுதல் செய்கிறோம். ஆனால் துன்பங்கள் நீங்காமல் நீடித்தாலோ, துன்பங்கள் அதிகரித்தாலோ கடவுளுக்கு கண் இருக்கிறதா? காது இருக்கிறதா? அல்லது கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா போன்ற சந்தேகங்கள் நம் உள்ளத்தில் வந்து விடுகிறது.

ஆனால், கடவுள் எப்பொழுதும் மனிதன் மேல் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. அவர் நம்மை நேசித்து, நம்முடைய பிரச்சினைகளில் இருந்து விடுவித்து நமக்கு நன்மை செய்து நாம் சந்தோஷமாக வாழ விரும்புகிறார்.

நம் வாழ்கையில் துன்பங்கள் வருவதற்கு முக்கியமான காரணமாக வேதம் சுட்டி காட்டுவது நாம் அறிந்தும் அறியாமலும் செய்த, செய்து வருகிற பாவங்கள் தான். வேதம் சொல்கிறது " நீங்கள் செய்த பாவங்களே உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே பெரும் பிரிவை உண்டாக்குகிறது" கடவுளோடு கூட நாம் இல்லாவிட்டால் நிச்சயமாக நமக்கு பிரச்சினைகள் வரவே செய்யும்.

அந்த பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றால், நீங்கள் செய்த பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட வேண்டும். நான் யாருக்கும் எந்த தீமையும் செய்ததில்லை, எல்லோருக்கும் என்னால் முடிந்த நன்மைகளையே செய்து வந்தேன், நான் மனதறிந்து இதுவரை பாவம் செய்ததே இல்லை, எனக்கு மட்டும் ஏன் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வருகிறதோ தெரியவில்லை என்று பலர் புலம்பி அழுகிறார்கள்.

ஆனால், நம்முடைய பார்வையில் பாவம் என்பது வேறு, கடவுளுடைய பார்வையில் பாவம் என்பது வேறு. உதாரணத்திற்கு, நாம் யாருக்கும் தீமை செய்யாமல் அமைதியாக நம் வேலையை பார்த்து கொண்டு போனால் போதும் என்று நினைக்கிறோம். அனால், கடவுளோ "உனக்கு நன்மை செய்ய தெரிந்திரிந்தும் அதை செய்ய தகுந்தவர்களுக்கு செய்யாதிருந்தால் அது பாவம்" என்று சொல்கிறார்.

விபச்சாரம் மிக கொடிய பாவம் என்று நினைக்கிறோம், ஆனால் கடவுளோ "ஒரு பெண்ணை இச்சையோடு (தகாத எண்ணத்தோடு) பார்த்தாலே, அவளோடு கூட நீ விபச்சாரம் செய்தாயிற்று" என்கிறார். ஆகவே நம் பார்வையில் மிக சாதாரணமாக தோன்றும் செயல்கள் கடவுளுடைய பார்வையில் மிக கொடிய பாவங்களாக இருக்கிறது.

இப்படிப்பட்ட பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டால் தான் நாம் பரிசுத்தமுள்ள நம்மை படைத்த கடவுளை கண்டடைய முடியும். வேதம் சொல்கிறது நாம் செய்த பாவங்கள் ரத்தம் சிந்தாவிட்டால் நம்மை விட்டு போகாது. ஆட்டு ரத்தமோ, மாட்டு ரத்தமோ அல்லது மனிதனை விட மட்டமான வேறு எந்த பிராணியின் ரத்தத்தினால் நம் பாவங்களை போக்க முடியாது. மனிதனை விட உயர்வான, பரிசுத்தமான ஒருவருடைய ரத்தம் பலியாக கொடுக்கப்பட்டால் தான் நம் பாவங்கள் போகும்.

மனிதனை படைத்த கடவுள் தான் மனிதனை விட உயர்வான, பரிசுத்தமானவர். அப்படிப்பட்ட பரிசுத்தமான கடவுளுடைய பிள்ளையாகிய இயேசு, மனித ரூபமெடுத்து இந்த பூமியில் மனிதர்களோடு மனிதராக இந்த பூமியில் மனிதன் எப்படி ஒரு உயர்வான கடவுளை போன்று பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வது என்று வாழ்ந்து காட்டி, நம் பாவங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு (நாம் செய்த பாவங்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை நமக்கு பதிலாக இயேசு அனுபவித்திருக்கிறார்) நமக்காக தன் கடைசி சொட்டு ரத்தம் வரை சிந்தி மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பினார். இயேசு என்பவர் மரித்த தெய்வம் அல்ல, உயிருள்ள ஒரே கடவுள், இந்த இயேசுவிடம் நம் பாவங்களை அறிக்கை செய்து (சொல்வது) பாவமன்னிப்பை பெற்று கொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் நமக்கு மன்னிக்கப்படும். நம் உள்ளத்தில் ஒரு புதிய சந்தோஷமும், சமாதானமும் வரும்.

இந்த பூமியில் நம் பாவங்களை மன்னிக்க இயேசு கிறிஸ்து ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இயேசு " நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன், என்னையல்லாமல் (என்னிடத்தில் பாவமன்னிப்பு பெற்று என்னை ஏற்று கொள்ளாமல்) ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று சொல்கிறார்.

நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் எல்லாம் கடவுளுடைய பார்வையில் அழுக்கான கந்தை துணிகளை போல் உள்ளது. நாம் செய்யும் நன்மைகளாலோ, நதிகளில் நீராடுவதாலோ நம் பாவங்களை தொலைக்க முடியாது.

சூரியனை மேகங்கள் மறைக்கும்போது சூரிய ஒளி நம் மீது படாது, அது போல் பாவமேகங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும்போது நாம் கடவுளை காண முடியாமல்,அவர் தரும் நன்மைகளை, ஆசிர்வாதங்களை, பெற்று கொள்ள முடியாமல் செய்து விடுகின்றன. இயேசுவின் ரத்தத்தினால் நாம் கழுவப்படும்போது நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளையாக மாறி, கடவுளிடம் இருந்து நன்மைகளை பெற்று கொள்கிறோம்.

பாவங்கள் நம்மை விட்டு போக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. முதலாவது நீங்கள் ஒரு பாவி என்று உணர்ந்து (உண்மையாக உங்கள் உள்ளத்திலிருந்து) கடவுளிடம் ஒத்து கொள்ளுங்கள்.

2. இது நாள் வரை செய்து வந்த பாவங்கள் எல்லாவற்றையும் இயேசுவிடம் உள்ளம் உடைந்து (அழுது) அறிக்கை செய்து (சொல்லி), அந்த பாவங்களை இயேசு மன்னிக்கும்படியாக வேண்டுங்கள்.

3. கீழ்கண்டபடி ஜெபியுங்கள்:

"இயேசுவே, நான் ஒரு பாவி என்று உணர்கிறேன். இயேசுவே, நான் செய்த பாவங்களை எனக்கு மன்னியுங்கள், இயேசுவே கல்வாரி சிலுவையில் என் பாவங்களை போக்கும்படியாக நீர் எனக்காக சிந்திய உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் என்னை கழுவி சுத்தம் செய்யும்.

நான் இனி பாவம் செய்யாமல் வாழ இயேசுவே நீர் எனக்கு உதவி செய்யும். என்னுடைய உள்ளத்தில் நீர் வந்து வாழும். என்னோடிருந்து என்னை பரிசுத்தமாக்கி, ஆசிர்வதியும், உமக்காக வாழ எனக்கு உதவி செய்யும்."- இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த நோய்கள், துன்பங்கள், மன குழப்பங்கள், பிரச்சினைகள் நிச்சயமாக இயேசு நீக்கி விடுவார்.

"உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்"




இந்த இணைய தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜீவ வசனங்களை படியுங்கள்.

நீங்கள் இயேசுவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். மொபைல் எண்: 09884677764, மின்னஞ்சல் முகவரி: jshline@gmail.com

No comments: