Saturday, June 19, 2010

gospel4

மூழ்குதலை நிறைவேற்றுங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் எபிரெயர் 6ல் உள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் என்று காண்கிறோம். இதில் முதலாவதாக தண்ணீரில் முழுகி எடுக்கும்

ஞானஸ்நானம் பற்றிக் கவனிப்போம்.

இந்த ஞானஸ்நானம் பற்றிய சத்தியத்தை ஏழு கேள்விகளின் அடிப்படையில் கற்றுக்கொள்வோம்.

அது எங்கிருந்து வந்தது? யூதர்கள் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை, ஆனால் தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளமாக குழந்தைகளாயிருக்கும்போதே விருத்தசேதனம் செய்வார்கள்: ஆதியாகமம் 17:9-13.

தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குத் தேவன் கொடுத்துள்ள ஆசீர்வாதங்களில் பங்கடைய விரும்பும் எவரையும் தங்களில் ஒருவராக அங்கீகரிப்பதற்கு அடை யாளமாக யூதர்கள் விருத்தசேதனம் செய்வதுண்டு. தங்கள் தெய்வ நம்பிக்கையை மாற்றிக்கொண்டு யூதர்களாக மாறுபவர் கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு அடையாளமாக விருத்தசேதனம் செய்யப்படுவதை யூதமார்க்கம் வலியுறுத்தியது.

யூதர்களும், மற்றவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறும்படி யோவான் ஸ்நானகன் போதனை செய்தார். தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்கும்படி தேவன் அவருக்குக் கட்டளை கொடுத்திருந்தபடியால் அப்படிச் செய்தார்.

தேவனுடைய ஆளுகை வரவேண்டுமென்ற மக்களின் நீண்டகால வாஞ்சை நிறைவேறப்போவதைக் குறித்து யோவான் ஸ்நானகன் அறிவித்தார். ஆண்கள், பெண்கள், தலைவர்கள், யூதர்கள் பிற இனத்தார் போன்ற அனைவருமே தேவனால் ஆளுகை செய்யப்படுவதற்கு ஆயத்தமாகும்படி அவர் அறைகூவல் விடுத்தார்.

""அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்... எருசலேம் நகரத்தாரும் யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்தில் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்'' (மத்தேயு 3:1-6).

யோவானிடம் ஞானஸ்நானம் பெறும்படி சென்றவர்களின் கூட்டத்தில் இயேசுவும் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறிக்கையிடவோ, மன்னிப்புப்பெறவோ அவசியம் ஏற்படும் படியான எந்தப் பாவமும் இயேசுவிடம் இருக்கவில்லை என்றாலும், தேவனுடைய இராஜ்யம் வரும்படி ஆயத்தப்பட்டவர்களோடு தம்மையும் அடையாளம் காண்பிக்கும்படியாக ஞானஸ்நானம் பெறுபவர்களோடு இயேசு போய் நின்றார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களின் மேசியாவாக அவர் இருந்தபடியால் அவர்களோடு அடையாளம் காணப்படுவதற்குரிய ஒரு கிரியையாக இயேசுவின் ஞானஸ்நானம் இருந்தது.

""அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்"" அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான் மத்தேயு 3:13-15.

இயேசு தமது உயிர்த்தெழுதலுக்குப்பின் சீஷருக்குக் கொடுத்த கட்டளைகளில் ஞானஸ்நானம் பற்றியது முக்கிய மானதாகும். தனது சீஷர்கள் தொடர்ந்து செய்யும்படியாக இயேசு விட்டுச்சென்ற மிஷனெரிப்பணியில் தண்ணீர் ஞானஸ்நானம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ""இயேசு அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்'' (மத்தேயு 28:18-20).

ஞானஸ்நானம் எப்படிக் கொடுக்கப்பட்டது?

ஒரு முழுமையான மூழ்குதல்:

யோவான் ஸ்நானகன் மற்றும் அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானங்கள் தண்ணீரில் முழுமையாக மூழ்குவதாக அமைந்திருந்ததை வேதத்தில் தெளிவாகக் காணமுடியும். சாலீம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் 3:23.

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறின உடனே... மத்தேயு 3:16.

பிலிப்பும் மந்தியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறின பொழுது... அப்போஸ்தலர் 8:38,39.

""ஞானஸ்நானம்'' என்ற வார்த்தை தண்ணீரில் முழுமையாக மூழ்குவதையே குறிப்பிடுகிறது. ""பாப்டைஸோ'' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தே ஆங்கிலத்தில் ""பாப்டிஸம்'' என்ற வார்த்தை வந்தது. அவ்வார்த்தைக்கு ""தண்ணீரில் மூழ்க வைத்தல், அமிழ்த்துதல்'' என்று பொருளாகும். ஒரு பொருளுக்கு சாயம் பூசுவதற்காக அதை அதற்குரிய பொருளில் மூழ்கவைப்பது, கப்பல் தண்ணீரில் மூழ்குவது, பெரிய பாத்திரத்திற்குள் ஒரு தம்ளரை அமிழ்த்தி தண்ணீரை மொண்டெடுப்பது, துணியைத் துவைப்பதற்காகத் தண்ணீரில் அதை மூழ்கவைப்பது போன்ற பல்வேறு காரியங்களுக்கும் இந்த வார்த்தையே கிரேக்க மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ளது. ""தண்ணீரில் அமிழ்த்துபவன், மூழ்க வைப்பவன்'' என்ற பொருளைக் குறிப்பிடவே ஜனங்கள் யோவானை ""ஸ்நானகன்'' என்று அடைமொழி அல்லது காரணப் பெயருடன் அழைத்தனர்.

தண்ணீரும், வார்த்தைகளும்: புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானத்திற்கு அதிகமான தண்ணீர் அவசியமாகும். அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுத்த போது ஒரு புதிய கிறிஸ்தவன் இயேசுவின் நாமத்தைத் தொழுதுகொள்ள வேண்டுமென்று போதிக்கப்பட்டது. அனனியா சவுலிடம்: ""இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்''. அப்போஸ்தலர் 22:16.

இன்றும் ஒருவர் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற வேண்டுமானால் முதலாவதாக இயேசுவை தனது இரட்சகரென்றும், ஆண்டவரென்றும் விசுவாசித்து வெளியரங்கமாக அறிக்கையிட வேண்டியது அவசியமாகும். ஒருவர் தனது கிறிஸ்தவ விசுவாசத்தை வார்த்தையாகிய அறிக்கையினாலும், கிரியையாகிய ஞானஸ்நானத்தினாலும் வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

யார் ஞானஸ்நானம் பெறலாம்?

மனந்திரும்பி, விசுவாசித்து, கீழ்ப்படிகிற அனைவரும்:

இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த தேவன், மேசியா என்று பேதுரு பிரசங்கித்ததைக் கேள்விப்பட்டவர்கள் ""...தங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள்...'' என்றான். அப்போஸ்தலர் 2:37,38. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் அப்போஸ்தலர் 2:41.

மேலேயுள்ள வசனங்களின் அடிப்படையில் ஞானஸ்நானம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு உரியது என்று அறிகிறோம். தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பியவர்கள்: நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று... அப்.2:38.

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைப்பவர்கள்: நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள். அப்.2:36.

வேதாகமத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறவர்கள்: பேதுருவினுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்.2:41.

எபேசுவில் பவுல் சந்தித்த யோவானின் ஞானஸ்நானம் பெற்றிருந்த 12 சீஷர்கள் மனந்திரும்புதல், விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவைகளுக்குச் சரியான முன்னுதாரண மாயிருக்கிறார்கள். ""நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்று பவுல் அவர்களிடம் கேட்டதற்கு ""யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றார்கள். அதற்குப் பவுல்: ""யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி; மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே'' என்றான். அப்.19:3,4.

தமஸ்குவின் சாலையில் சவுல் இயேசுவைச் சந்தித்தபின் அனனியா அவனைச் சந்திக்கும்படி சென்றபோது: ""இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு'' (அப்.22:16) என்று கூறி ஞானஸ்நானம் பெறும்படி அவனை உற்சாகப்படுத்தினான்.

இவைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? ஞானஸ்நானம் எடுக்கவேண்டிய நபர்தான் அதைக்குறித்து தீர்மானிக்க வேண்டும். தனது சொந்த முடிவின்படி ஒருவர் எடுக்கும் தீர்மானமே ஞானஸ்நானமாகும். இக்காரியத்தில் ஒருவரின் சொந்த மனச்சாட்சியும், விருப்பமும் அடங்கியிருக்கிறது. தண்ணீர் ஞானஸ்நானமானது முற்றிலும் விசுவாசிகளுக்கு மட்டுமே உரியது என்று தெளிவாக புதிய ஏற்பாடு வலியுறுத்துகிறது. அப்.8:12,13; 16:30-33.

ஒரு உள்ளுர் சபைக்குள் நுழைவதற்கு அது வாசலாயிருக்கிறது: ஒரு உள்ளுர் சபையின் அங்கமாக இருக்க விரும்புகிறவர்களுக்குரியது அது. சபையோடு தொடர்பில்லாத ஒரு காரியமாக ஞானஸ்நானத்தை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது. அது சபைக்குள் ஒருவரை வழிநடத்தும் வாசலாயிருக்கிறது.

யூதராக அல்லது இஸ்லாமியராக இருந்து மனந்திரும்பிய ஒருவர் ஞானஸ்நானம் பெறும்போது இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அவர் ஞானஸ்நானம் பெறும்போது அவமானப்படுத்தப்பட்டு, வீட்டைவிட்டுத் துரத்தப்படுவார் அல்லது கல்லறை அவருக்காக ஆயத்தமாக்கப்படும்.

ஒரு உள்ளூர் சபையோடு தன்னை இணைத்துக்கொள்ள அல்லது அடையாளம் காண்பித்துக்கொள்ள விரும்பாத ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க விரும்புவது அர்த்தமற்றதாகும். பெந்தெகோஸ்தே நாளில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் சபையில் சேர்ந்துகொண்டார்கள். பேதுருவின் செய்திக்குச் செவிகொடுத்தவர்கள் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட்டார்கள்.

ஞானஸ்நானத்தில் குழந்தைகளைக் குறித்த காரியம் என்ன?

புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானம் குழந்தைகளுக்குரியதல்ல. வீட்டாரனைவரோடும் அந்நாட்களில் ஞானஸ்நானம் எடுத்ததாக வேதாகமம் கூறுவதால் அதில் குழந்தைகளும் இருந்திருப்பார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். ""பிரசங் கிக்கப்பட்ட சுவிசேஷ செய்தியை விசுவாசித்து, ஏற்றுக் கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள முடிவுசெய்தவர்கள் மனமகிழ்ச்சியாயிருந்தனர்'' என்று அப்.16:33,34ல் காண்கிறோம். இயேசுவை விசுவாசிப்பதினால் ஏற்படும் மனமகிழ்ச்சி என்பது மனதின் எண்ணங்களில் ஏற்படும் ஒரு வளர்ச்சியாகும். இதுபோன்ற காரியங்களைக் குறித்து மனமகிழ்ச்சியடையுமளவு குழந்தைகள் வளர வேண்டியவர்களாயிருக்கிறார்கள். எனவேதான் குழந்தை களுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமல் அவர்களைக் கர்த்தருக்கென்று பிரதிஷ்டைசெய்து அவர்களுக்காகவும், பெற்றோருக்காகவும் ஜெபம் செய்கிறோம். மாம்சத்தின் படியான குழந்தைகளல்ல, மறுபடியும் பிறந்த ஆவிக்குரிய குழந்தைகள்தான் ஞானஸ்நானம் பெறமுடியும்.

ஞானஸ்நானத்தின் உண்மையான பொருள் என்ன?

ஞானஸ்நானத்தில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க புதிய ஏற்பாட்டில் கழுவப்படுதல், அடக்கம்பண்ணப்படுதல், தப்பிக்கொள்ளுதல் அல்லது கடந்துபோகுதல் என்கிற மூன்று உவமையான வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கழுவப்படுதல்: அழுக்காயிருப்பவர்களுக்குரிய ஒரு குளியல்.

ஞானஸ்நானத்தில் விசுவாசிகள் உள்ளான நிலையில் கழுவப்படுகிறார்கள். அப்போஸ்தலர் 22:16ல்: அனனியா சவுலிடம்: ""நீ ஞானஸ்நானம் பெற்று உன் பாவங்கள் போகக் கழுவப்படு'' என்றும், 1 பேதுரு 3:21ல்: ""ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து... இரட்சிக்கிறது'' என்றும் வாசிக்கிறோம்.

அடக்கம்பண்ணப்படுதல்: மரித்தவர்களுக்குரிய அடக்கம்.

இயேசு தமது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் செய்த வைகளையெல்லாம் நீங்கள் உங்கள் ஞானஸ்நானத்தில் அடையாளமாக நிறைவேற்றுகிறீர்கள். ""கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப் பட்டவர்களானால், அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்'' (ரோமர் 6:3,4,5). ""ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்-பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்'' (கொலோசெயர் 2:12).

தப்பிக்கொள்ளுதல் அல்லது கடந்துபோகுதல்:

புதிய இருதயம் பெற்றுக்கொண்டவர்களுக்கு:

ஞானஸ்நானத்தில் விசுவாசிகள் தங்கள் பழைய வாழ்வுடனுள்ள தொடர்புகளை முடித்துக்கொண்டு ஒரு புதிய ஆரம்பத்தை அடைகின்றனர். அவர்கள் சாத்தானு டைய இராஜ்யத்திலிருந்து கிறிஸ்துவின் இராஜ்யத்திற்குள் கடந்துவந்து அதில் நிலைநிறுத்தப்படுகிறார்கள். இவ்வுலகத் திற்கு மரித்தல் என்பதற்கு இது ஒன்றே வழியாயிருக்கிறது.

யூஜீன் பீட்டர்சன் என்பவர் வெளியிட்ட ""இதுவே செய்தி'' என்ற புதுயுக மொழிபெயர்ப்பு புதிய ஏற்பாட்டில்: ""பாவம் ஆளுகைசெய்த தேசத்தை நாம் விட்டு விலகினோம். நன்மையானவைகளை அடையும்படி அங்கிருந்து புறப்பட்டு வெளியேறினோம். ஞானஸ்நானத்தில் இதுதான் நமக்கு நடந்தது. தண்ணீருக்கடியில் நாம் சென்றபோது பாவத்தின் தேசத்தை நமக்குப் பின்னாக விலக்கினோம், தண்ணீரை விட்டு நாம் வெளியே வந்தபோது ஒரு புதிய ஜீவியத்தை அடையும்படி கிருபையின் தேசத்திற்குள் வந்துவிட்டோம்'' (ரோமர் 6:1...4) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பாவங்களிலிருந்து மாத்திரம் நாம் இரட்சிக் கப்படுவதில்லை. பாவம் நிறைந்த ஒரு சமுதாயத்திலிருந்தே முழுமையாக நாம் இரட்சிப்படைகிறோம். தங்கள் தனிப்பட்ட பாவங்களைக்குறித்து மனந்திரும்பும்படி பேதுரு அழைத்ததுடன், ஞானஸ்நானத்தின் மூலம் ""மாறுபாடுள்ள சந்ததியைவிட்டுத் தங்களை இரட்சித்துக்கொள்ளும்படியும்'' ஆலோசனை கூறினான். அப்போஸ்தலர் 2:40.

""கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படி'' பவுல் பிலிப்பி பட்டணத்து விசுவாசிகளுக்கு நினைப்பூட்டினார். பிலிப்பியர் 2:15.

ஞானஸ்நானத்தின் மூலம் தாறுமாறான இவ்வுலகின் கலாச்சாரத்திலிருந்து விலகி தேவனுடைய ஜனங்கள் நிறைந்த ஒரு புதிய சமுதாயத்திற்குள் நாம் வருகிறோம்.

விசுவாசித்து, ஞானஸ்நானம் பெறுவதின்மூலம் விசுவாசிகள் சாத்தானுடைய ஆளுகை நிறைந்த இவ்வுலகிலிருந்து தங்களை வேறுபிரித்துக் கொள்வதுடன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகை நிறைந்த சபையாகிய அவருடைய இராஜ்யத்திற்குள் வருகிறார்கள்.

""விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்'' மாற்கு 16:16. நமது மனதையும், சிந்தனைகளையும் இதுவரை நிரப்பியிருந்த கோணலும், மாறுபாடுமான உலகின் கொள்கைகளிலிருந்து விடுதலையடைவது இரட்சிக்கப்படுவதின் முக்கியமான ஒரு அம்சமாகும்.

ஒரு சமுதாயத்திலுள்ள தனிநபர்களாகிய நம்மை கிறிஸ்து ஒருவரால் மட்டுமே புதிய நபர்களாக மாற்றமுடியும். ""மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்'' தீத்து 3:4,5. ஞானஸ்நானத்தின் மூலம் புதிய விசுவாசிகள் தங்களுடைய பழைய வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், மூட நம்பிக்கைகள்,போலியான மதநம்பிக்கைகள் போன்றவைகளிலிருந்து விடுதலையடைகின்றனர்.உன்னை அடிமைப்படுத்தி, ஆளுகை செய்துகொண்டிருக் கும் பாவத்திலிருந்தும், தவறான பழக்கங்களிலிருந்தும் உன்னை முற்றிலுமாக விடுதலை செய்யும்படி நீ கர்த்தராகிய இயேசுவின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

""இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தின வருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்'' கொலோசெயர் 1:13.

""ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப் பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத் தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்'' கொலோசெயர் 2:12.

ஞானஸ்நானம் ஒரு அடையாளமாக மட்டுமிராமல், அது தேவனுடைய கிருபையை அடைவதற்குரிய ஒரு வழியாகவுமிருக்கிறது.

அது ஒரு அடக்க ஆராதனைபோல இராமல், அடக்க ஆராதனையாகவே இருக்கிறது. அது தப்பிக்கொள்வதுபோல இராமல் பிசாசின் ஆளுகையிலிருந்து தப்புவதாகவே இருக்கிறது. எந்த அடையாளத்தினால் ஞானஸ்நானம் குறிப்பிடப்படுகிறதோ அதை செயல்முறையில் ஞானஸ் நானத்தில் நிறைவேற்றுகிறோம். குளிப்பது, அடக்கம் செய்வது, தப்பிக்கொள்வது போன்ற அடையாளங்கள் எல்லாமே ஞானஸ்நானத்தில் உண்மையிலேயே நிறைவேற்றப்படுகின்றன.

நமது கீழ்ப்படிதலுக்கும், சாட்சியிடுதலுக்கும் ஞானஸ்நானம் ஒரு வெளியரங்கமான அடையாளமாகக் காணப்பட்டாலும், அதில் தேவனுடைய கிருபையை நாம் அடைந்துகொள் கிறோம் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

நோவாவும், ஜலப்பிரளயமும்: கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைப் பேதுரு நோவா காலத்தின் ஜலப்பிரளயத்துடன் ஒப்பிடுகிறார். ""அதற்கு (ஜலப்பிரள யத்திற்கு) ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல் தேவனைப்பற்றும் நல்மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது'' 1 பேதுரு 3:21.

ஞானஸ்நானமென்பது சுத்திகரிப்பின் ஒரு பரிசுத்த சடங்காயிருக்கிறது.

மோசேயும், செங்கடலும்:

செங்கடலைக் கடந்துசென்றதைப் பவுல் கிறிஸ்தவ ஞானஸ் நானத்துடன் ஒப்பிடுகிறார். ""நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்'' 1 கொரிந்தியர் 10:1,2.

கடந்த காலங்களில் நம்மோடு தொடர்புள்ளவைகளாக இருந்த நம்முடைய பாவ உறவுகளைத் துண்டித்துவிட்டு, கிறிஸ்துவோடும், அவருடைய ஜனங்களோடும் ஒரு புதிய ஆரம்பத்தைத் துவங்குவதற்குரிய ஒரு ஆவிக்குரிய சடங்காக ஞானஸ்நானம் காணப்படுகிறது.

நீங்கள் எப்போது ஞானஸ்நானம் பெறலாம்?

இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். இதை நீங்கள் விரும்பினால் எடுக்கலாம், இல்லாவிட்டால் பரவாயில்லை என்று ஒருபோதும் சாதாரணமாக இருந்துவிட முடியாது; ஏனென்றால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்பது தேவனுடைய ஆலோசனையும், கட்டளையுமாயிருக்கிறது.

இதுவரை நீங்கள் ஞானஸ்நானம் எடுத்திருக்காவிட்டால், இப்போது எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? அடுத்து நான் எடுத்துவைக்க வேண்டிய படி ஞானஸ்நானம்தான் என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒரு புதிய வாழ்வைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி விசுவாசத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும். ""அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். அதற்குப் பிலிப்பு: ""நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை என்றான்'' அப்போஸ்தலர் 8:36,37.

அடுத்து நடப்பது என்ன?

தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு அடுத்தபடியாக இன்னொரு ஞானஸ்நானம் அவசியம் என்பதை யோவான் ஸ்நானகன் வெளிப்பாடாக அறிந்து அறிவித்தான். இதன்மூலம் சுத்திகரிப்பு, பரிசுத்தம் என்பவைகளோடு வல்லமையும் அவசியம் என்பதை அவன் வலியுறுத்தினான்.

கிறிஸ்துவுக்குள்ளாக்கும் ஒரு ஞானஸ்நானமும், கிறிஸ்து விடமிருந்து பெறும் இன்னொரு ஞானஸ்நானமும் நமக்கு அவசியம். முதல் ஞானஸ்நானத்தில் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவைகளோடு இணைந்துகொள்கிறோம். இரண்டாவது ஞானஸ்நானத்தில் தேவனுடைய ஆவியானவரின் பரிசுத்தம், வல்லமை ஆகியவைகளுடன் இணைந்துகொள்கிறோம்.

வீட்டுப்பாடம்

கேள்விகளும் பதில்களும்

விசுவாசிகள் ஞானஸ்நானம் பெறும்படி முன்வரும்போது கீழ்க்கண்ட கேள்விகளையோ அல்லது அந்தந்த சபைகளின் வழக்கப்படியோ கேட்கலாம்.

கேள்வி: இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் அறிக்கை செய்கிறாயா?

பதில்: ஆம், அப்படியே செய்கிறேன்.

கேள்வி: இயேசு கிறிஸ்துவைத் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினார் என்று விசுவாசிக்கிறாயா?

பதில்: ஆம், விசுவாசிக்கிறேன்.

கேள்வி: இந்த உலகத்தின் வழிபாடுகள், மாம்சத்தின் இச்சைகள், பிசாசின் ஆலோசனைகளுக்கு விலகி ஜீவிப்பாயா?

பதில்: ஆம், அப்படியே செய்வேன்.

ஞானஸ்நானம் கொடுக்கும்போது பின்வருமாறு கூறலாம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் இயேசு கிறிஸ்து, அவருடைய ஜீவன், அவருடைய மரணம், அவருடைய உயிர்த்தெழுதல், அவருடைய பரமேறுதலுடன் உன்னை இணைக்கும்படி உனக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்.

விசுவாச அறிக்கை:

கீழ்க்கண்ட காரியங்களை வாசித்து ஞானஸ்நானம் பெறுபவர் அறிக்கையிடும்படி செய்யலாம்.

* இயேசு கிறிஸ்துவுக்குள் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கிறேன், நான் தேவனுடைய பிள்ளை: யோவான் 1:12.

* நான் கிறிஸ்துவின் சிநேகிதன்: யோவான் 15:15.

* நான் தேவனால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறேன், நான் தேவனுக்குச் சொந்தமானவன்: 1 கொரிந்தியர் 6:20.

* நான் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கமாக இருக்கிறேன்: 1 கொரிந்தியர் 12:27.

* நான் தேவனுடைய பிள்ளையாக புத்திரசுவீகாரம் பெற்றிருக்கிறேன்: எபேசியர் 1:5.

* என்னுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு, நான் மீட்கப்பட்டிருக்கிறேன்: கொலோசெயர் 1:14.

* நான் கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாயிருக்கிறேன். எனக்கு நடப்பவையெல்லாம் நன்மைக்காகவே என்று அறிந்திருக்கிறேன்: ரோமர் 8:28.

* தேவனுடைய அன்பிலிருந்து எவரும் என்னைப் பிரிக்கமுடியாது: ரோமர் 8:35.

* நான் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறேன்: கொலோசெயர் 3:3.

* தேவன் என்னிலே துவங்கின நற்கிரியையை நிறை வேற்றி முடிப்பார் என்று உறுதியாயிருக்கிறேன்: பிலிப்பியர் 1:6.

* தேவன் எனக்குப் பயமுள்ள ஆவியையல்ல, பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியைக் கொடுத்திருக்கிறார்: 2 தீமோத்தேயு 1:7.

* தேவையுள்ள வேளைகளில் கிருபையும், இரக்கமும் எனக்குக் கிடைக்கும்: எபிரெயர் 4:16.

* நான் தேவனால் பிறந்திருக்கிறபடியால் பிசாசானவன் என்னைத் தொடமுடியாது: 1 யோவான் 5:18.

* நான் இவ்வுலகத்திற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறேன்: மத்தேயு 5:13,14.

* கனிகொடுக்கும்படி நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்: யோவான் 15:16.

* நான் தேவனுக்கு உடன் ஊழியக்காரனாயிருக்கிறேன்: 2 கொரிந்தியர் 6:1.

* நான் உன்னதங்களில் கிறிஸ்துவுடனேகூட அமர்ந்திருக்கிறேன்: எபேசியர் 2:6.

* நான் தேவனுடைய கரங்களின் சிருஷ்டிப்பா யிருக்கிறேன்: எபேசியர் 2:10.

* நம்பிக்கையோடும், விடுதலையோடும் நான் தேவனை அணுகமுடியும்: எபேசியர் 3:12.

* என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லா வற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு: பிலிப்பியர் 4:13.

No comments: