Saturday, June 19, 2010

பரிசுத்த ஆவியானவர்

உன்னதத்தின் வல்லமை பரிசுத்த ஆவியானவரின் கிரியை

மனந்திரும்புதல் மற்றும் ஆவிக்குரிய ஜீவனை உங்களில் உருவாக்குவதும், தேவன்மேல் விசுவாசம் உருவாக உங்களுக்கு உதவிசெய்வதும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை என்று முன்பே கவனித்தோம்.

தேவனுக்காக நீங்கள் வல்லமையான சாட்சியாகத் திகழவும், உங்கள் இயற்கையான பெலத்தையும், மனிதத் திறமை களையும்விட இயற்கைக்கு மேலான நிலையில் உங்களைப் பெலப்படுத்துவதும் பரிசுத்த ஆவியானவர் செய்யும் மற்றொரு காரியமாகும். இதையே இப்பாடத்தில் உன்னதத் திலிருந்து வரும் வல்லமை பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ற தலைப்பில் கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்.

இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களானபின்பு பரலோகத்திற்கு ஏறிச்சென்று பிதாவின் சந்நிதானத்தில் வீற்றிருக்கிறார். அவர் பரமேறிச் செல்வதற்குமுன்பு தமது சீஷர்களிடம்: தான் அவர்களை அநாதைகளாக விடுவதில்லையென்றும், என்றென்றும் அவர்களோடு இருக்கும்படி தேற்றரவாளனும், உதவிசெய்கிறவருமாகிய பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாகவும் வாக்குப் பண்ணினார். யோவான் 14:15...18. மேலும்: ""யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான், ஆனால் இன்னும் சில நாட்களுக்குள் நீங்கள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்'' என்றும் கூறினார். அப்போஸ்தலர் 1:5.

மேலும் தமது சீஷர்கள் தம்முடைய சாட்சிகளாக ஜீவிப்பதற்குரிய வல்லமையைப் பரிசுத்த ஆவியானவர் அருளுவார் என்பதைக்குறித்தும் இயேசு அவர்களுக்கு வாக்குப்பண்ணினார். ""பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது நீங்கள் பெலனடைந்து (வல்லமையடைந்து) எருசலேமிலும், யூதேயா, சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்'' என்றார். அப்போஸ்தலர் 1:8.

இந்த வாக்குத்தத்தம் பெந்தெகோஸ்தே நாளில் அப்படியே நிறைவேறியது. ""அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்'' அப்போஸ்தலர் 2:4.

சீஷர்கள் எங்கெல்லாம் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித் தார்களோ அங்கெல்லாம் புதிதாகக் கிறிஸ்தவர் களானவர்களுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் கடந்துவந்தார். இயேசுவோடு அவர்கள் துவங்கிய புதிய ஜீவியத்தின் ஒரு அங்கமாகப் பரிசுத்த ஆவியானவர் மாறினார்.

இத்தாலிய இராணுவத்தின் ஒரு பிரிவுக்குத் தலைவனாயிருந்த கொர்நெலியு என்பவரின் வீட்டிற்குப் பேதுரு சென்று ஊழியம் செய்தபோது நடந்த சம்பவங்கள் இதற்குச் சரியான சான்றாயிருக்கின்றன.

அங்கு கூடியிருந்த கிரேக்கர்களிடம் பேதுரு பேசிக் கொண்டிருந்தபோது: ""வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும் கேட்டபோது... பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்துப் பிரமித்தார்கள்'' அப்போஸ்தலர் 10:44...46.

புதிய கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் துவக்கத்திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான செயல்களை அனுபவிப்பதைக்குறித்து அப்போஸ்தலர்கள் எழுதின நிருபங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ""நாம் யூதராயிருந்தாலும், கிரேக்கராயிருந்தாலும், அடிமைகளா யிருந்தாலும், சயாதீனராயிருந்தாலும் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.'' 1 கொரிந்தியர் 12:13. கிறிஸ்தவ வாழ்வு துவங்குவதில் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்கிற அனுபவம் மிகவும் முக்கியமானதாகும்.

""நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊருகிற நீரூற்றாயிருக்கும்'' என்று பரிசுத்த ஆவியானவரைக் குறித்து இயேசு வாக்குப்பண்ணினார். யோவான் 4:14.

""என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற பரிசுத்த ஆவியானவரைக்குறித்து இயேசு இப்படிச் சொன்னார்'' யோவான் 7:38,39.

பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறார். நம்மிலும், நம் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் பெலப்படுத்துதல், பரிசுத்தமாக்குதல், வெளிப்படுத்துதல், உறுதிப்படுத்துதல் என்று நான்கு விதமாகக் கிரியைகள் நடப்பிக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் பெலப்படுத்துகிறார்

இக்காரியத்தை அவர் இயேசுவின் ஜீவியம் மற்றும் அவருடைய ஆரம்பகால சீஷர்கள் மற்றும் இக்காலத்தின் விசுவாசிகளின் ஜீவியத்தில் செய்ததையும், செய்வதையும் நாம் பார்க்கலாம்.

இயேசு:

இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றபின்பு ""பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்'' லூக்கா 4:1.

""சோதனையெல்லாம் முடிந்தபின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார்'' லூக்கா 4:14.

அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து: ""கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்'' லூக்கா 4:18,19 என்கிற வேதபகுதியை வாசித்தார்.

இயேசு தனது போதனைகளின்போதும், பிசாசுகளைத் துரத்தி வியாதியஸ்தரைக் குணமாக்கியபோதும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பயன்படுத்தினார். ""சூரியன் அஸ்தமித்தபோது ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பல்வேறு வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து அவர்களைச் சொஸ்தமாக்கினார். பிசாசுகளும் நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டது'' லூக்கா 4:40,41.

இயேசுவின் சீஷர்கள்:

இயேசு செய்யவும், உபதேசிக்கவும் துவங்கினவைகளை அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் தொடர்ந்து செய்தார்கள் அப்போஸ்தலர் 1:1. திரளான மக்களை ஆதாயம் செய்யும்படி வல்லமையாகவும், திறமையாகவும் பிரசங்கிக்கவும், வியாதியஸ்தர்களைக் குணமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், அற்புதங்களைச் செய்யவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். தேவாலயத்திற்கு வெளியே பிறவிச் சப்பாணியாயிருந்த ஒருவனைக் குணமாக்கியது இதற்கு ஒரு உதாரணமாகும். ""தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும், கரடுகளும் பெலன்கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்'' அப்போஸ்தலர் 3:7,8.

எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் தன் காலத்திலிருந்த ஆதித்திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் கிரியைகளைக் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: ""முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக் கப்பட்டதும்; அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து...'' எபிரெயர் 2:3,4.

அப்போஸ்தலனாகிய பவுல் தனது ஊழியத்தின் கிரியைகளும், போதனைகளும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையி னாலேயே நடந்தன என்று குறிப்பிட்டுள்ளார். ரோமர் 15:18,19.

இந்நாட்களின் விசுவாசிகள்:

இயேசுவைக்குறித்துத் தைரியமாகச் சாட்சி கொடுப்பதற்கும், வியாதியஸ்தரைக் குணமாக்கவும், வல்லமையோடு ஜெபிக்கவும், அந்தகார வல்லமைகள் அனைத்தையும் மேற்கொள்ளுவதற்கும் நம்மைப் பரிசுத்த ஆவியானவர் பெலப்படுத்துவார் என்று நாம் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம்.

1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் சபையின் அங்கத்தினராகிய நம்மைப் பெலப்படுத்தவும், சபைக்குள் வருகிற அந்நியரை உணர்த்துவதற்கும், அவர்களுக்கு உதவிசெய்வதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்நியபாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல், தீர்க்கத்தரிசனம் சொல்லுதல் ஆகிய மூன்று வரங்களும் நமது வாயின் வார்த்தைகளோடு சம்பந்தமுடையவையாகும்.

ஆவிகளைப் பகுத்தறிதல், ஞானத்தைப் போதிக்கும் வரம், அறிவை உணர்த்தும் வரம் ஆகிய மூன்றும் நமது அறிவு மற்றும் ஞானத்தோடு தொடர்புடைய வெளிப்பாட்டின் வரங்களாயிருக்கின்றன.

குணமளிக்கும் வரம், விசுவாச வரம், அற்புதங்களைச் செய்யும் வரம் ஆகிய மூன்றும் நமது செயல்களின் மூலமாக வெளிப் படும் வல்லமையின் வரங்களாகும். ""இவைகளை யெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்'' 1 கொரிந்தியர் 12:11.

ஆவிக்குரிய வரங்களை நாடுங்கள்:

நாம் ஆவிக்குரிய வரங்களை, குறிப்பாக தீர்க்கத்தரிசன வரத்தை நாடும்படியாக உற்சாகப்படுத்தப்பட்டுள்ளோம். அவை ஆவியானவரின் பிரசன்னத்தை வெளிப்படுத்து கின்றன. நாம் எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப் பட்டோம் என்று 1 கொரிந்தியர் 12:13ல் பவுல் குறிப்பிட்டுள் ளார். நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து தேவனுடைய சபையைக் கட்டுவதற்காக அவருடைய ஆவியானவரின் வரங்களால் நிரப்பப்படுவது எத்தனை நலமானதாயிருக்கும்!

அந்நிய பாஷைகளில் பேசும் ஆவியின் வரமானது இரண்டுவிதமான வகைகளில் பயன்படுத்தப்பட முடியும்.

வெளியரங்கமாக ஒரு பொதுவான ஆராதனையில் அந்நியபாஷையில் பேசும்போது அதற்குரிய அர்த்தம் சொல்லப்படவேண்டும். அந்நியபாஷையில் தேவனிடத்தில் பேசுகிறபடியால் அதற்குரிய விளக்கம் ஒரு ஜெபத்தின் வடிவத்தில் இருக்கலாம். 1 கொரிந்தியர் 14:2,16. யாராவது அர்த்தம் சொல்லவேண்டும் என்பதை அர்த்தம் சொல்லுவதற்கு யாரும் இல்லாவிட்டால் அந்நியபாஷையில் பேசுபவர் சபையில் பேசாமல் தனியே பேசிக்கொள்ளலாம், அல்லது பேசுபவரே அதற்குரிய அர்த்தத்தையும் சொல்லவேண்டும் என்ற பொருளில்தான் பவுல் குறிப்பிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 14:5,28.

அந்நியபாஷையின் இரண்டாவது பகுதி தனிப்பட்ட ஜெபத்தில் அதைப் பயன்படுத்துவதாகும். தங்கள் ஆவியிலிருந்து தேவனைத் துதித்துப் பாடுவதற்கும், ஜெபிப்பதற்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவனால் அருளப்பட்டுள்ள விசேஷமான கிருபை இதுவாகும். இதை ஆவியில் ஜெபித்தல் என்று கூறலாம். இதைக்குறித்து சில காரியங்களைக் கவனிப்போம்.

ஆவியில் ஜெபித்தல்

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணுங்கள் என்று அப்போஸ்தலனாகிய யூதா குறிப்பிட்டுள்ளார் (வசனம்:20).

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டுள்ளார் எபேசியர் 6:18.

நமது சிந்தனையிலிருந்து ஜெபித்தல், நமது ஆவியிலிருந்து ஜெபித்தல், வார்த்தைகள் இல்லாமல் ஜெபித்தல் என்று மூன்றுவிதமான ஜெபங்களைக்குறித்து அவர் கூறியுள்ளார்.

புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளுடன் நமது சிந்தனையிலிருந்து ஜெபித்தல்:

நமது சிந்தனையிலிருந்து ஜெபிக்கும்போது, நாம் சத்தமாக ஜெபிக்காவிட்டாலும் நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளுடன் ஜெபிக்கிறோம். நமது புரிந்துகொள்ளு தலுடன் நாம் ஜெபிக்கும்போது நமது சிந்தனைகளையும், எண்ணங்களையும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிறார்.

நாம் ஆவியில் நிரம்பியிருக்கும்போது பிதாவுக்குச் சித்தமானபடி ஜெபிப்பதற்காக அவர் நமது மனதைக் கட்டுப்படுத்துகிறார் அல்லது வழிநடத்துகிறார். இதுபோன்ற சமயங்களில் நமது சிந்தனைகளில் எழும்பும் ஒரு தெய்வீக மான எண்ணம், நமது இருதயத்தில் எழும்பும் ஒரு தெய்வீக மான விருப்பம் போன்றவை ஒரு ஜெபமாக உருவாகும்படி ஆவியானவர் தனது மனதிலுள்ளவைகளை நமது மனதில் புகுத்துவார்.

புரிந்துகொள்ளமுடியாத வார்த்தைகளுடன் நமது ஆவியிலிருந்து ஜெபித்தல்:

பரிசுத்த ஆவியானவர் வரும்போது தேவனுடைய இராஜ்யத் தின் அடையாளமாக விசுவாசிகள் நவமான பாஷைகளில் பேசுவார்கள் என்று இயேசு கூறினார். மாற்கு 16:17.

இந்தவிதமான ஜெபத்தைக்குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அந்நியபாஷையில் பேசுகிறவன் ஆவியினாலே இரகசியங் களைப் பேசினாலும் அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே அவன் மனுஷரிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான்... நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்ற தாயிருக்கும்... நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன். 1 கொரிந்தியர் 14:2,14,15.

மேலும் பவுல்: நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்... உங்களெல்லாரிலும் நான் அதிகமாய் பாஷைகளைப் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். 1 கொரிந்தியர் 14:5,18.

தனிப்பட்ட ஜெபத்தில் பயன்படுத்தும்படி இந்த வரம் அளிக்கப்படுகிறது. தேவனுடைய அதிசயமான செயல்களை நினைவுகூர்ந்து அவருடைய நன்மைகள் கிருபைகளுக்காக அவரைப் புகழ்ந்து பாடவும் துதிக்கவும், அவருக்கு ஸ்தோத் திர பலிகளை ஏறெடுக்கவும், அவரை நோக்கி ஜெபிக்கவும் ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த வரங்களை அளிக்கிறார். இவ்வரத்தைப் பயன்படுத்துவதின் மூலம் ஒவ் வொரு விசுவாசியும் தங்கள் பக்தியில் விருத்தியடைவதுடன், தங்கள் ஆவியில் பெலனடையவும் முடியும்.

பரிந்துபேசும் ஜெபம் செய்யவும், பிசாசுகளைத் துரத்தவும் இந்த தனிப்பட்ட ஜெபம் ஒரு வல்லமையான வழியாயிருக் கிறது. அந்நியபாஷைகளில் பேசும் வரத்தைக் கொரிந்து சபையார் தவறாகப் பயன்படுத்தியபோது, அப்போஸ்தல னாகிய பவுல் அதைச் சரியாகப் பயன்படுத்தியதுடன், அதற்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். அவரைப் பின்பற்றுவதற்கு நாம் வெட்கப்படக்கூடாது. தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதினால் அதைப் பயன்படுத்தாமலேயே போவது சரியல்ல, சரியாகப் பயன்படுத்துவதே சரியான முடிவாகும் என்று ஒரு பக்தன் குறிப்பிட்டுள்ளார்.

வார்த்தைகளே இல்லாமல் ஜெபித்தல்:

பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்கும் மூன்றாவது வழியைப் பவுல் கூறியுள்ளார். ஆவியானவரும் நமது

பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக் கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுக்களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான் களுக்காக வேண்டுதல் செய்கிறார்... (ரோமர் 8:26,27).

நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து பெருமூச்சுக்களுடன் புறப்படும் ஜெபமானது ஒரு பிரசவ வேதனைக்கு ஒப்பான தாகும். ...ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுக் களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்... (ரோமர் 8:27).

நமது பல துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு வேதனைக்குரியவையாகும். சில சமயங்களில் தெளி வான வார்த்தைகளே இல்லாமல் ஜெபிக்கும்படி ஆவியான வர் நம்மை நடத்துவார். நாம் என்ன சொன்னோம் என் பதைத் தேவன் அறிவார். ஒரு விசுவாசிக்காகத் தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்த ஆவியானவர் ஜெபிக்கிறார்.

இவ்விதமான ஜெபத்திற்குப் பின்வரும் வசனங்கள் உதாரணமாயிருக்கின்றன.

இயேசு மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்தார். எபிரெயர் 5:7.

இயேசு மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது லூக்கா 22:44.

...இயேசு கெத்தசமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து... துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்... என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது... என்றார் மத்தேயு 26:36...38.

ஆர்த்தர் வாலிஸ் என்பவர் தான் எழுதிய ஆவியில் ஜெபியுங்கள் என்ற புத்தகத்தில்: ""இவ்விதமான ஜெபத்தில் ஜெபிப்பவரின் வார்த்தைகள் வெளியரங்கமாகவும், தெளிவாகவும் இல்லாவிட்டாலும், ஜெபிப்பவரின் இருதயத்தின் ஆழத்தை அறிந்திருக்கிற தேவன் அந்த நபரின் ஆவியானவர் மூலம் என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவர் பேசும் அந்நியபாஷை மனுஷரின் பாஷையானாலும், தூதரின் பாஷையானாலும் அது ஆவியானவர் தரும் பாஷையாயிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதமான ஜெபங்களில் உபயோகப்படுத்தப்படும் பாஷை கள் அல்லது வார்த்தைகளை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம்:

நமது சிந்தனையிலிருந்து புறப்பட்டுவரும் நமது தாய்மொழி அல்லது நாம் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு பாஷையில் ஜெபித்தல்.

அந்நியபாஷையில் அல்லது ஆவியானவர் தரும் பாஷைகளில் ஜெபித்தல்.

உள்ளான வியாகுலத்துடன் நமது புரிந்துகொள்ளுதல் இல்லாமலேயே ஆவியானவரின் பாஷையில் ஜெபித்தல்.

மேலே சொல்லப்பட்டுள்ள 3 காரியங்களும் உங்களுக்குப் பழக்கமில்லாதவையாக இருந்தால், உங்கள் தனிப்பட்ட பக்திவிருத்திக்காகப் பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷையில் பேசும் வரத்தை உங்களுக்குத் தரும்படியும், பிரசவ வேதனைபோன்ற ஆத்தும வியாகுலத்துடன் அவருடைய பாஷையில் உங்கள் மூலமாய் அவர் ஜெபிக்கும்படியும் கேளுங்கள். இதைப்புரிந்துகொள்வதும், இந்த அனுபவமும் உங்களுக்குப் புதுமையாகத் தோன்றினாலும், பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே உங்களுக்காக, உங்கள் மூலமாக வேண்டுதல் செய்கிறவர் என்பதை மனதில்கொள்ளுங்கள்.

பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுத்திகரிக்கிறவர் : நமது குணாதிசயங்களை மாற்றுகிறவர்.

தேவனுடைய இராஜ்யத்தைப் பொறுத்தவரை நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன சொல்லுகிறோம் என்பவைகளை விட நாம் யாராக இருக்கிறோம் என்பதே தேவனுடைய பார்வையில் முக்கியமானதாக இருக்கிறது. உதாரணமாக: நமது சமுதாயத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைவிட சமுதாயத்திற்கு நாம் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறோமா என்பதே முக்கியமானதாகும்.

நம்மை உள்ளான முறையில் மாற்றங்களுக்குள் கொண்டு செல்வதே பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளில் முக்கியமானதாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நமது குணாதிசயம் அல்லது தன்மைகளை ஆவிக்குரிய நிலையில் மாற்றுகிறார்.

பாலுறவு ஒழுக்கக்கேடுகள், திருடுதல், குடிவெறி போன்ற பல்வேறு கேடான காரியங்களின் பின்னணியிலிருந்துவந்த கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும்போது: உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள், ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப் பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள் என்று பவுல் குறிப்பிட்டுள்ளார் 1 கொரிந்தியர் 6:9...11.

நம்மைக் கழுவியதுடன் நிறுத்திவிடாமல், தொடர்ந்து நம்மைப் பரிசுத்தமாக்குகிற பணியைப் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். இதின் விளைவாக சாதகமான தன்மைகள் நம்மில் உருவாகின்றன. இதை ஆவியின் கனிகள் என்று பவுல் குறிப்பிடுகிறார். ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் கலாத்தியர் 5:22,23.

ஆவியானவரின் ஒத்தாசையுடன் நமது குணாதிசயங்களில் முன்னேற்றங்கள் உருவாவதுடன், நாம் தேவன் எதிர் பார்க்கும் மனிதராகவும் மாறுகிறோம். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால் ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம் கலாத்தியர் 5:25.

ஆவியானவர் நம்மை ஐக்கியப்படுத்துகிறார்

பிரிவினைகள் நிறைந்த இவ்வுலகில் பரிசுத்த ஆவியானவர் நிறம், இனம், மொழி, சமுதாய ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதுவுமே இல்லாமல் உள்ளூர் சபைகள் என்ற அஸ்திபாரத் தின்மேல் கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும் அவர் ஒருங்கிணைக்கிறார் அல்லது ஐக்கியப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் ஒவ்வொருவரும் மற்றவர்களை மதிக்கவும், நேசிக்கவும் பழகியவர்களாக இருப்பார்கள். மறுபடியும் பிறந்த விசுவாசிகளாகிய அனைவரையும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுக்குள் ஒரே மனிதனாக அல்லது சரீரமாக ஐக்கியப்படுத்துகிறார்.

இதைக்குறித்து: பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள் என்று கொலோசெயர் 3:14,15ல் பவுல் கூறியுள்ளார். கிறிஸ்துவுக்குள் புதிய உடன் படிக்கையின் ஜனங்களாக நம்மைப் பரிசுத்த ஆவியானவர் ஒன்றிணைக்கிறார். சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் என்று எபேசியர் 4:3ல் நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துகிறார்:

ஒருவர் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பெறும்போது அதின் விளைவாக அவரது உள்ளத்தில் கலாத்தியர் 4:6 ஒரு உண்மை அனுபவமாக மாறும். அவ்வசனத்தில்: நீங்கள் புத்திரராயிருக்கிறபடியால்; அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் என்று வாசிக்கிறோம்.

மேலும் ரோமர் 8:15,16ல்: அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் என்றும் வாசிக்கிறோம்.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் ஒவ்வொருவரும் பிதாவின் சிறப்பான அன்பிற்குத் தாங்கள் தகுதியுள்ள வர்களாக இருக்கிறோமென்கிற அறிவிற்குள் வருகிறார்கள். இயேசு ஞானஸ்நானம் பெற்றுக் கரையேறினபோது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று பிதாவானவர் சாட்சிகொடுத்தார். யோவான் 16:27ல்: நீங்கள் என்னை விசுவாசிக்கிறபடியினால்...பிதாதாமே உங் களைச் சிநேகிக்கிறார் என்று இயேசு கூறிய வார்த்தைகளின் ஆழத்தை ஒவ்வொரு விசுவாசியும் உணர்ந்துகொள்ள முடியும்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்பதைப் பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துகிறவராக இருக்கிறார்.

தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரும் அவரை அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையை அடைந்துகொள்ளுகிறார்கள். அந்த அனுபவ முள்ள எவரும் ஒரு குழந்தை தகப்பனிடம் நெருங்குவது போன்ற ஆழமான உரிமை உணர்வுடன் தேவனை ஆராதிக்கக்கூடியவர்களாக மாறுகிறார்கள்.

இந்த அனுபவத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய பிள்ளைதான் என்கிற நிச்சயத்தைப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் தந்திருக்கிறாரா?

ஒருவேளை உங்கள் பதில் இல்லை என்பதாக இருக்கு மானால் இப்பாடத்தின் இறுதியிலுள்ள வீட்டுப்பாடத்தைச் செய்யும்போது பிதாவாகிய தேவனுடைய தனிப்பட்ட அன்பையும், அதைக்குறித்து ஆவியானவர் அருளும் உறுதியையும் பெற்றுக்கொள்ள ஆயத்தப்படுங்கள்.

ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் வாருங்கள்!

பரிசுத்த ஆவியானவர் வல்லமை தருகிறார், பரிசுத்தப்படுத்து கிறார், சுத்திகரிக்கிறார். இவைகளெல்லாம் நம்மில் நடக்கும்படி நாம் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்.

நாம் பாவம் செய்வதின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துகிறோம், நமது அவிசுவாசத்தினிமித்தம் அவரை அ�ணைத்துப்போடுகிறோம், நமது கீழ்ப்படியாமை யினிமித்தம் அவருக்கு எதிர்த்து நிற்கிறோம்: அப்போஸ்தலர் 7:51, எபேசியர் 4:30, 1 தெசலோனிக்கேயர் 5:19.

ஒரு புதிய நிரப்புதலை ஆவியானவரிடம் கேட்பதின் மூலமாக அவரோடுள்ள நமது நெருக்கத்தை நாம் அதிகரித்துக் கொள்ளமுடியும். ஆதலால் நீங்கள் மதியற்றவர் களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்து எபேசியர் 5:17,18.

தேவ ஊழியரான டேவிட் மேத்யூ என்பவர்: ஒரு குடிகாரன் எனப்படுபவன் தொடர்ந்து குடியில் நிலைத்திருப்பவ னாவான். அவன் குடியினால் ஆளுகை செய்யப்படுகிறான். அவனது குணம், குடும்பம், வேலை, டிரைவிங், அவனது பண வரவு செலவுகள் மற்றும் வாழ்க்கை முழுவதுமே குடியினால் கட்டுப்படுத்தப்படுகிது. அதுபோலவே ஆவியினால் நிறைந்திருக்கும் மனிதனும் அவனது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்படுகிறான் அல்லது கட்டுப்படுத்தப்படுகிறான். ஒரு குடிகாரன் தொடர்ந்து குடியில் நிலைத்திருப்பது எப்படி? அவன் தொடர்ந்து குடிப்பதுதான் அதற்குக் காரணம். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது ஆவியினால் நிரம்பிய ஜீவியமாகும். ஜெபம், ஆராதனை போன்றவைகளின்மூலம் நாம் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை அல்லது கட்டுப்பாடு நம்மில் நிலைத்திருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆவியானவரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நமது மனது பூரணமாக செயல்படும்படியான விடுதலை யுள்ளதாகிறது. ரோமர் 5:8,9. நமது உணர்ச்சிகள் சந்தோஷம், மகிழ்ச்சி போன்ற ஆவியானவர் தரும் உணர்வுகளால் நிரம்பியிருக்கவும், அதை இசை மற்றும் பாடல்களின் மூலமாக வெளிப்படுத்தும் விடுதலையுள்ளதாக மாறுகிறது. ரோமர் 14:17,18; எபேசியர் 5:18...20.

மதுபானம் உணர்வுகளை மழுங்கச் செய்து அதைக் கீழான நிலைக்குள்ளாக்குகிறது. ஆனால் பரிசுத்த ஆவிக்குள் நிரம்பின ஜீவியம் ஒரு கிறிஸ்தவனை அனுதினமும் மேலான ஆவிக்குரிய நிலைக்குள் கொண்டுசெல்வதுடன், தேவனுக்கும் பிரயோஜனமுள்ள ஒரு நபராக அவனை மாற்றுகிறது. நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நபராக ஜீவிக்கிறீர்களா?

வீட்டுப்பாடம்

ஆஸ்த்தப்படுங்கள்

நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படாதவராக இருந்தால் அதற்காக ஆயத்தப்படுங்கள். ஐந்து விதங்களில் நீங்கள் ஆயத்தப்படமுடியும்.

01. மனந்திரும்புங்கள்:

தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டதாக உங்கள் வாழ்வில் காணப்படும் அனைத்தையும் உங்களை விட்டகற்றுங்கள். சுயத்தை மையமாகக் கொண்ட ஜீவியத்திலிருந்து, தேவனை மையமாகக் கொண்ட ஜீவியத்திற்குள் வாருங்கள்.

02. எதிர்பாருங்கள்:

வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் தேவன் உங்களை நிரப்புவாரென்று எதிர்பாருங்கள். நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றும் கிரியைகளினாலல்ல, விசுவாசத்தினாலேயே பரிசுத்த ஆவியைப் பெறுகிறோமென்று கலாத்�தியருக்குப் பவுல் எழுதினார். கலாத்தியர் 3:2.

விசுவாசம் மிகவும் இன்றியமையாதததாகும். பரிசுத்த ஆவியானவர் வருவதை எதிர்பாருங்கள். எப்போது, எப்படி வருவார் என்பதை நீங்கள் அறியாதிருந்தாலும் அவர் நிச்சயம் உங்களை நிரப்புவார் என்று எதிர்பாருங்கள்.

03. கேளுங்கள்:

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்... பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா? என்று இயேசு கூறினார். லூக்கா 11:9...13.

04. பருகுங்கள்:

யோவான் 7:37ல்: ஒருவன் தாமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன் என்று இயேசு கூறிய வார்த்தைகளை விசுவாசித்துக் கீழ்பபடியுங்கள். தண்ணீர் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாயிருக்கிறது. சுத்தப்பளிங்கு போன்ற தண்ணீரைப் பருகுவதைப்போல கற்பனை செய்து பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளான மனிதனுக்குள் இறங்குவது அதைவிட மேலான அனுபவமாயிருக்கும்.

05. விட்டுக்கொடுங்கள்:

உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து பரிசுத்த ஆவியானவர் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறாரோ அதற்கென்று விட்டுக்கொடுங்கள். உன்னதத்திலிருந்து வரும் வல்லமையாகிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் தரும் எல்லாவிதமான கட்டளைகளுக்கும், வழிநடத்துதல்களுக்கும் உங்களை முற்றிலுமாக விட்டுக்கொடுங்கள்.

நீங்கள் அந்நியபாஷைகளில் பேசாமலிருந்தால் ஆவியானவர் அந்த வரத்தை உங்களுக்குத் தரும்படி கேளுங்கள். ஒருவேளை யாராவது உங்களுக்காக அல்லது உங்களோடு ஜெபிப்பதை நீங்கள் விரும்பினால் தேவ ஊழியர்களையோ, மூத்த விசுவாசிகளையோ அப்படிச் செய்யும்படி கேளுங்கள்.

ஒருவேளை நீங்கள் அந்நியபாஷைகளில் பேசுபவராயிருந்தால் பரிசுத்த ஆவியானவர் அதை வியாக்கியானம் அல்லது அதற்குரிய அர்த்தத்தைச் சொல்லித்தரும்படி ஜெபியுங்கள்.

சபையிலுள்ள மற்றவர்களுக்குத் தீர்க்கத்தரிசன வார்த்தைகளைத் தரும்படி ஜெபியுங்கள். நீங்கள் ஏமாந்துபோக மாட்டீர்கள். மற்றவர்களின் விசுவாசத்தைக் கட்டவும், கிறிஸ்தவ ஜீவியத்தில் அவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் வேதனைகள் வருத்தங்கள் தீருவதற்குரிய ஆறுதலான வார்த்தைகளை உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துவார்.

பரிசுத்த ஆவியானவரால் நிரம்பிய அனுபவத்தோடிருப் பதற்குரிய வாய்ப்புகளை எப்போதும் பயன்படுத்துங்கள்.

1 comment:

Unknown said...

Best Christian Matrimony in tamilnadu visit: Christian matrimony

Best Christian Matrimony in tamilnadu visit: கிறிஸ்தவர் தி௫மண தகவல் மையம்