Saturday, June 19, 2010

Gospel2

ஒரு புதிய ஆரம்பம் மறுபடியும் பிறத்தல், மனந்திரும்புதல்

புதிய பிறப்பு:

ஆவிக்குரியபிரகாரமாக உங்களில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றத்தின் காரணமாகவே இப்பாடத்தைக் கற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறீர்கள். மனந்திரும்பி, தேவனை விசுவாசித்ததின் விளைவாக நீங்கள் கிறிஸ்தவராக மாறியிருப்பதுடன், தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் மூலம் ஒரு புதிய வாழ்வையும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

தேவனோடு ஒரு சரியான உறவைத் துவங்குவதுடன் சம்பந்த முடைய மூன்று முக்கியமான காரியங்களை இப்பாடத்தில் பார்க்கப்போகிறோம். அவற்றில் முதலாவதாக ஒரு புதிய ஆரம்பம் அல்லது புதிய பிறப்பைக் குறித்துக் கவனிப்போம்.

ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் கணமாட்டான் மெய்யாகவே.... சொல்லுகிறேன் என்று இயேசு கிறிஸ்து கூறினார் (யோவான் 3:3).

இந்த வசனத்தின் அடிப்படையில் கீழேயுள்ள எந்தக் காரியங்களினாலும் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக மாற முடியாது என்பது தெளிவாகிறது:

ஒரு கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்திருப்பதினால்: மதசம்பந்தமான கியைகள் மற்றும் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதினால்: நற்கிரியைகளைச் செய்வதினாலும், நல்லவனாக வாழ முயற்சிப்பதினாலும்:

ஒரு கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்திருப்பதினால்: அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷ சித்தத்தினாலாவது பிறவாமல்; தேவனாலே பிறந்தவர்கள் (யோவான் 1:12)

மதசம்பந்தமான கியைகள் மற்றும் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதினால்: கிறிஸ்துவின் சுவிசேஷமானது அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்குத் தேவபெலனாயிருக்கிறது (ரோமர் 1:16).

நற்கிரியைகளைச் செய்வதினாலும், நல்லவனாக வாழ முயற்சிப்பதினாலும்: இரட்சிப்பு என்பது நாம் செய்கிற நல்ல காரியங்களினால் வருவதில்லை, கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபேசியர் 2:8,9).

பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் வழியாகப் பிதாவாகிய தேவன் அருளும் புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்போது நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள்.

நம் ஒவ்வொருவரிலும் தவறுகள் இருப்பதால் இந்தப் புதிய பிறப்பு நம் அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகும். இந்தத் தவறுகளைத் தேவன் ஒருவரால் மட்டுமே சரிசெய்ய முடியும்.

நம்மிலுள்ள தவறுகள் என்ன?

வேதாகமத்தின்படி நாம் பாவம் செய்பவர்களாகவும், தேவனுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறோம். நம்முடைய குணங்களும், செயல்களும் தேவனுக்குப் பிரியமில்லாதவை களாகும். பிறரைப் பாதிக்கக்கூடிய பல்வேறு தனிப்பட்ட பாவங்களை நாம் செய்கிறோம். நமது சுபாவத்தின்படி நாம் தேவனிடமிருந்தும், மற்ற மனிதரிடமிருந்தும் பிரிந்தவர் களாக வாழுகிறோம். தேவனுடைய ஜனங்களைவிட்டு நாம் வெளியே இருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டிலுள்ள பத்துக் கற்பனைகளில் தேவனுடைய முக்கியமான கட்டளைகள் எழுதப்பட்டுள் ளன. அவருடைய பிரமாணங்கள் நமது இருதயங்களிலும் எழுதப்பட்டுள்ளன. நாம் தவறு செய்வதின் விளைவாக குற்ற மனச்சாட்சிக்குள்ளாகிறோம். நமது இருதயத்தின் இரகசியமான எண்ணங்கள், நமது நோக்கங்கள், நமது குணாதிசயங்கள், நமது செயல்கள் ஆகிய அனைத்தையும் தேவன் நியாயம்தீர்ப்பார் (ரோமர் 2:12-16). ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொரு தனி மனிதரும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற் போகும்போது அவருக்கு எதிர்த்து நிற்கிறவர்களாக மாறுகிறார்கள்.

எல்லோரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையற்றவர் களானார்கள் (ரோமர் 3:23).

எல்லோரும் விழுந்து போனவர்களாகவே இருக்கிறோம்

நம்மைச் சுற்றியிருக்கிற அனைவருமே பாவத்தினால் வீழ்ந்தவர்கள்தான் என்றாலும் நாம் நமது வாழ்வைமட்டுமே கவனிக்க வேண்டும். பவுல் கூறுகிறபடி எல்லோருமே தேவனுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறோம். ""நீதிமான் ஒருவனாகிலும் இல்லை'' (ரோமர் 3:10-12).

தேவனை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்புகூருவதிலும், நம்முடைய அயலாரை நம்மைப்போல நேசிப்பதிலும் தோற்றுப்போனவர்களாகவே நாம் காணப்படுகிறோம். (மத்தேயு 22:37-40).

மீண்டும் துவக்கத்திற்கு

நமது இருதயங்களிலுள்ள தவறுகளானது நம்மை ஆதாம் ஏவாளோடு சம்பந்தமுடைய துவக்கத்திற்குக் கொண்டு செல்லுகிறது. துவக்கத்தில் ஆதாமைத் தமது சாயலாகவே தேவன் சிருஷ்டித்தார். பூரணமானவனாகவும், நல்லவனாக வும், தேவனைப் பிரியப்படுத்தும் ஒரு அர்ப்பணிப்புள்ள இருதயமுள்ளவனாகவுமே அவன் படைக்கப்பட்டான். தேவனோடு நல்லதொரு நட்பை அவன் அனுபவித்தான். அற்புதமும், அழகும் நிறைந்த பரதீசாகிய ஏதேனைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதும் அவனுக்கு இனியதொரு காரியமாக இருந்தது.

நம்முடைய பிரதிநிதி

முழு மனிதகுலத்திற்கும் ஆதாமை ஒரு தலைவனாக அல்லது ஒரு பிரதிநிதியாகத் தேவன் நியமித்து, எல்லாருடைய சார்பிலும் தீர்மானங்கள் செய்வதற்குரிய பொறுப்பையும் அவனுக்குக் கொடுத்திருந்தார். அவன் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும், தன்னை நேசிக்கவேண்டும், முழு மனிதகுலத்திற்கும் நன்மைதரும் நல்ல தீர்மானங்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விருப்பமாயிருந்தார். ஆனால் வருந்தத்தக்கவிதமாக அவன் சாத்தானின் சோதனைக்கு இடங்கொடுத்து, தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருப்பதைத் தெரிந்துகொண்டான்.

நேர்மையற்ற மனுக்குலம்

ஆதாமின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவன்மேலும், அவனது குடும்பத்தின்மேலும், எதிர்கால சந்ததியின்மேலும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டன. ஆதியாகமம் 3வது அதிகாரம் ஆதாமின்மேல் வந்த சாபத்தைக் குறித்து விவரிக்கிறது. இதின் காரணமாகவே மனிதகுலத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் விழுந்துபோன சுபாவத்துடன் பிறக்கின்றனர். ""ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமை யினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டனர்'' (ரோமர் 5:19). நாம் நேர்மையற்றவர்களாக இருப்பதினாலேயே நமது வாழ்க்கையும் நேர்மையற்றதாக இருக்கிறது.

நாம் மறுபடியும் பிறப்பதற்குமுன்: ""அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தோம், இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடி நடந்தோம், நமது மாம்ச இச்சையின்படி நடந்து நமது மாம்சமும் மனதும் விரும்பின வைகளைச் செய்தோம்'' என்று எபேசியர் 2:1,2,3 ஆகிய வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளார்.

கருவிலேயே பாவத்தின் சுபாவம்

ஆதாமின் கீழ்ப்படியாமையினிமித்தம் நாம் இவ்வுலகில் பிறக்கும்போதே பாவம் செய்வதற்குரிய சுபாவத்துடன்தான் பிறக்கிறோம். தவறுசெய்யும்படி சிறு குழந்தைகளுக்கு நாம் போதனை செய்யவேண்டிய தேவையே இல்லை. அதைத் தானாகவே அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

தேவனுக்கு எதிரானவைகளைச் செய்வதற்குரிய நேர்மையற்ற சுபாவம் நமது தாயின் கருவிலிருக்கும்போதே நமக்குள் உருவாகிவிடுவதைத் தேவன் தாவீதுக்கு வெளிப்படுத்தினார். பாவத்தின் சுபாவம் நாம் பிறப்பதற்குமுன் நம்மில் இருந்தாலும், நாம் இவ்வுலகில் பிறந்தபின்பே பாவத்தின் கிரியைகள் துவங்குகின்றன. ""துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றி லிருந்து பிறந்ததுமுதல் பொய்சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்'' (சங்கீதம் 58:3); ""இதோ நான் துர்க்குணத்துடன் உருவானேன், என் தாய் என்னைப் பாவ சுபாவத்துடன் கர்ப்பந்தரித்தாள்'' (சங்கீதம் 51:5).

கடினமான இருதயம்:

பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் நமது வாழ்வில் செயல்படாவிட்டால் நாம்: ""நமது புத்தியில் அந்தகாரப்பட்டு, இருதயக்கடினத்தினால், நம்மிலுள்ள அறியாமையினால் தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராக இருக்கிறோம்'' (எபேசியர் 4:18).

தவறுகளைச் சரிசெய்தல்

மனிதகுலத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக ஆதாம் தோல்வியடைந்தான். தேவனுடைய ஆசீர்வாதங்களை இவ்வுலகின் நாடுகளுக்குக் கொண்டுசெல்லும்படி தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களும் தங்கள் அழைப்பில் தோல்வியடைந்தனர். இவ்வுலகின் எல்லா ஜனங்களுக்கும், எல்லா தேசங்களுக்கும் ஆவியின்படியான புதிய வாழ்வைக் கொண்டுவரும்படி தேவனுடைய ஜனங்களின் சபைக்குத் தலைவராகவும், இவ்வுலகின் மேசியாவாகவும் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்பதென்றால் தேவனுடைய ஜனங்களோடு இணைக்கப்படுதல் என்று பொருளாகும். இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு ஒருவர் இரட்சிக்கப்படும்போது அவர் கிறிஸ்துவுக்குள்ளான வராகும்படி தெரிந்துகொள்ளப்படுகிறார் என்று எபேசியர் 1:12,13ல் காண்கிறோம்.

நமது பாவங்களிலிருந்தும், அவற்றின் விளைவுகளிலிருந்தும் நம்மை விடுதலையாக்கும்படி சிலுவையில் நமக்காக மரிக்கும்படி இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வெளிப்பட்டார். அவர் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தபோது ஆண்டவராகவும், இரட்சகராகவும் உயர்த்தப் பட்டார். இந்த நற்செய்திக்கு நீங்கள் செவிகொடுத்ததின் காரணமாகவே இப்பாடத்திட்டம் உங்கள் கைகளில் வந்து சேர்ந்துள்ளது.

""பாவங்களினாலே மரித்தவர்களாயிருந்த உங்களைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்தார்'' என்று கொலோசெயர் 2:13ல் காண்கிறோம்.

மறுபடியும் பிறப்பதென்றால் என்ன?

மறுபடியும் பிறப்பதென்றால்: ஒரு புதிய சுபாவத்தையும், ஒரு புதிய ஆவிக்குரிய வாழ்வையும் பெற்றுக்கொள்ளுவதாகும். ""நமக்குள் ஒரு ஆவிக்குரிய ஜீவனை அல்லது சுபாவத்தை இரகசியமாக தேவன் உருவாக்கும் காரியமே மறுபடியும் பிறக்கும் அனுபவமாகும்'' என்று ஒருவர் கூறினார். அது முற்றிலுமாக தேவனுடைய ஒரு கிரியையாகும். ""இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் மறுபடியும் பிறக்கிறார்கள், அப்போது அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள், அவர்கள் மனித முறைமையின்படி இப்புதிய பிறப்பை அடையாமல் அதைத் தேவனாலேயே அடைகிறார்கள் அல்லது புதிய பிறப்பைத் தேவனாலே அடைகிறார்கள்'' என்ற கருத்தை யோவான் தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 1:10-13, யாக்கோபு 1:18, 1 பேதுரு 1:3-5 ஆகிய வசனங்களையும் வாசிக்கவும்).

உங்கள் ஆவி அல்லது உள்ளான மனிதன்தான் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இப்புதிய ஜீவனை அடைகிறான் என்பதைக் கவனியுங்கள். இந்தப் புதிய ஜீவனானது உங்களுக்குள்ளிருந்து கிரியை செய்து உங்கள் ஆத்துமாவிலும், சரீரத்திலும், மனதிலும், எண்ணங்களிலும், செயல்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:23,24).

புதிய பிறப்பானது தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான செயலாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவைக் குறித்த சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் மனந்திரும்பி தேவனை விசுவாசிப்பதற்குரிய ஒரு ஆவிக்குரிய விழிப்புணர்வாக புதிய பிறப்பின் காரியங்கள் நம்மில் செயல்படத் துவங்குகின்றன. மனந்திரும்புதல், தேவனை விசுவாசித்தல், புதிய பிறப்பை அனுபவித்தல் ஆகியவை மிகக்குறுகிய காலத்திற்குள் நம்மில் வரிசையாக நிகழத்துவங்கும்.

கிறிஸ்தவ வாழ்வின் துவக்கமாக மனந்திரும்புதலும், தேவனை விசுவாசிப்பதும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நாம் இப்போது கவனிப்போம்.

பின்னோக்கித் திரும்புதல்... மனந்திரும்புதல்

தம்முடைய வார்த்தையை நமக்கு அறிவிக்கச் செய்வதின் மூலம் தேவனை நாம் அறிந்துகொள்ளும்படி அவர் நம்மை அழைக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாக அவர் நம்மை மறுபடியும் புதுப்பித்து, புதிய ஆவிக் குரிய ஜீவனை நம்மில் உருவாக்குகிறார். நம்முடைய பாவங்களைக்குறித்து மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவதும், நம்முடைய இரட்சிப்புக்காகக் கிறிஸ்துவின் மேல் நமது விசுவாசத்தை வைப்பதுமே சுவிசேஷத்தின் அழைப்பிற்கு நாம் கொடுக்கும் மறுமொழியாகும். இந்த மனமாற்றமானது (முற்றிலுமாகத் திரும்புதல்) ஆவிக்குரியபிரகாரமாகப் பாவங்களிலிருந்து திரும் புதலும் (மனந்திரும்புதல்), கிறிஸ்துவிடம் வருவதுமாகும் (விசுவாசம்). ""தேவனிடத்திற்கு மனந்திரும்ப வேண்டுமென்றும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்றும் அப்போஸ்தலனாகிய பவுல் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தார்'' (அப்போஸ்தலர் 20:21).

கிறிஸ்தவத்தின் அடிப்படை உபதேசங்கள் அல்லது போதனைகளில் மனந்திரும்புதலும், தேவனை விசுவாசிப்பதும் முதலாவதான இரண்டு காரியங்களாகும் என்று எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் குறிப்பிடுகிறார் எபிரெயர் 6:1.

முற்றிலுமாகத் திரும்புதல்... மனந்திரும்புதல்

மனந்திரும்புதல் என்பது இருதயத்தில் நிகழும் ஒரு மாற்றமாக இருப்பதுடன், அது பாவத்தைவிட்டு முற்றிலு மாகத் திரும்புவதற்கு ஒரு மனிதனின் முழுத்தன்மைகளிலும் மாற்றங்களை உருவாக்கும் காரியமாக இருக்கிறது. ""அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்'' என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளார் (அப். 17:30).

வேதாகமத்திலுள்ள மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது: பின்னோக்கித் திரும்புதல்; ஒரு குணாதிசயம் அல்லது வாழ்க்கை முறையிலிருந்து இன்னொன்றிற்கு முற்றிலுமாகத் திரும்புதல்; மனது, இருதயம், எண்ணங்கள், விருப்பங்கள், முடிவுகளில் முழுமையான மாற்றங்கள் உருவாகுதல் என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனந்திரும்புதல் என்பது பின்வரும் காரியங்களைக் குறிக்கும்:

இயேசு கிறிஸ்துவே ஆண்டவர், இரட்சகர் என்றும்; நீங்கள் ஒரு பாவி என்றும், தேவனுடைய ஜனங்களோடு தொடர்பு இல்லாதவர்களாயிருக்கிறீர்கள் என்றும் ஒப்புக் கொள்ளுதல்.

இயேசு கிறிஸ்துவே உங்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி, அவருடைய விருப்பங்கள் உங்கள் விருப்ப மாகுவதும், அவர்மேல் அன்புகூர்ந்து அவருக்கு உண்மையாக இருப்பதுமாகும்.

தேவனுடைய காரியங்களுக்கு எதிர்த்துநிற்கும் குணத்திலிருந்து முற்றிலுமாகத் திரும்புதல், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழியில் செல்லுதல்.

நீங்கள் மனந்திரும்பும்போது பின்வரும் மூன்று காரியங்களைச் செய்யவேண்டும்:

01. ஒரு தனிப்பட்ட தீர்மானம் செய்யவேண்டும்:

தேவன் முற்றிலும் சரியானவரென்றும், நீங்கள் முற்றிலும் தவறானவரென்றும் புரிந்துகொள்வீர்கள் (ரோமர் 3:19). பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்படுவதுடன் நிறுத்தி விடாமல் அதை உதறித்தள்ளிவிட்டு தேவனுடைய உதவிக்காக அவரிடம் திரும்ப வேண்டும்.

நீங்கள் தவறாகச் சிந்தித்தவைகள், பேசியவைகள், செய்தவைகளைக் குறித்து நீங்கள் மனந்திரும்ப வேண்டும் ஏசாயா 55:6-8. இதில் தனிப்பட்ட பாவங்களை அறிக்கையிடுதலும் அடங்கும்.

02. அனுபவப்பூர்வமான காரியத்தைச் செய்யவேண்டும்:

பக்தியற்ற காரியங்களைச் செய்வதை நிறுத்திவிட்டு தேவபக்தியுள்ள காரியங்களைச் செய்யவேண்டும். ""தெசலோனிக்கேய விசுவாசிகள் ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, தேவனிடத்திற்குத் திரும்பினார்கள்'' (1 தெசலோனிக்கேயர் 1:9).

நாம் யாருக்குத் தீங்கிழைத்தோமோ அவர்களுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் (லூக்கா 19:5-9);

தீங்கான பொருட்களை எரித்துவிட வேண்டும் (அப்போஸ்தலர் 19:18-20);

தேவையிலிருப்பவர்களுக்கு உதவிசெய்வதும் இதில் அடங்கும் (லூக்கா 3:10-14).

03. சாதகமான காரியங்களில் முன்னோக்கிச் செல்லவேண்டும்:

உங்கள் சொந்த விருப்பங்களைவிட தேவனுடைய இராஜ்யமே உங்கள் வாழ்வின் தலைசிறந்த விருப்பமாக மாறவேண்டும். தவறான பழக்க வழக்கங்கள், தவறான நட்புகள், மற்றும் தொடர்புகளை முறித்துவிடுவதும் இவைகளில் அடங்கும்.

சுருக்கமாகக் கூறினால்: மனந்திரும்புதலென்பது மனதில் ஏற்படும் உள்ளான மாற்றமும், முற்றிலும் புதிதான ஒரு திசையில் செல்வதற்காக நமது சரீரப்பிரகாரமான வாழ்வில் தேவனுடைய வழிகளுக்குத் திரும்பி வருவதுமாகும்.

இக்காரியத்தை இளைய குமாரனைப்பற்றிய உவமையில் இயேசு கிறிஸ்து சுருக்கமாக விவரித்துள்ளார். ""அவனுக்குப் புத்தி தெளிந்தபோது... நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போவேன் என்று சொல்லி... எழுந்து புறப்பட்டுத் தன் தகப்பனிடத்தில் வந்தான்'' (லூக்கா 15:17-20).

மனந்திரும்புதலென்பது இருதயத்தின் எண்ணங்களிலும், குணாதிசயங்களிலும் ஏற்படும் ஒரு புதிய ஆவிக்குரிய தன்மையாகும், இது உங்கள் ஜீவியம் முழுவதும் தொடர வேண்டும். உயிர்த்தெழுந்த இயேசு லவோதிக்கேயா சபையிடம்: நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதை யாயிருந்து மனந்திரும்பு'' என்று கூறினார் (வெளி. 3:19).

வீட்டுப் பாடம்:

மனந்திரும்புதல்

பழையவைகளை விட்டுவிட்டு சுத்திகரித்துக் கொள்ளுதல்

பின்வரும் வேதவசனங்களை வாசியுங்கள்:

மத்தேயு 15:17...20; 1 கொரிந்தியர் 6:9...11;

2 கொரிந்தியர் 12:20,21; கலாத்தியர் 5:19...21.

சிந்தனை, வார்த்தை, செயல்களில் குறிப்பிடத்தக்கவிதமாக நீங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் இவைகளை உங்களுக்கு உணர்த்தும் போது அவைகளை அறிக்கையிட்டு தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மந்திரவாதம், பில்லிசூனியம், ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற காரியங்களில் நீங்கள் ஈடுபட்டதுண்டா? தேவனைக்குறித்து நீங்கள் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளுக்காக மனந்திரும்புங்கள். தவறான பிசாசின் காரியங்களை உடனடியாக விட்டு விலகுங்கள்.

பாலுறவு சம்பந்தமான பாவங்களில் ஈடுபட்டிருந்தீர்களா? உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவைகளை விட்டு விலகி, தேவன் உங்களை மன்னித்து, விடுதலைசெய்யும்படி கேளுங்கள்.

மேலேயுள்ள பாவங்களுடன் தொடர்புடைய புத்தகங்கள் மற்றும் பொருட்களை உடனடியாக அழித்துவிடுங்கள். (உதாரணமாக: தாயத்துகள், மந்திரவாதப் புத்தகங்கள், இச்சையைத் தூண்டும் படங்கள் நிறைந்த பத்திரிக்கைகள் போன்றவை).

காரியங்களைப் புதிதாக்கும் மறுமலர்ச்சிக்குள் வாருங்கள்:

நீங்கள் தேவனிடம் அறிக்கை செய்யவேண்டிய கெட்ட பழக்க வழக்கங்கள் ஏதாகிலும் உங்களிடம் இருக்கிறதா? தேவனுடைய உதவியுடன் அவைகளை விட்டொழியுங்கள். (உதாரணமாக: போதை மருந்துகளை உபயோகித்தல், குடிப்பழக்கம், புகைபிடித்தல், பெருந்தீனி, முன்கோபம், சோம்பேறித்தனம், மொழி மற்றும் ஜாதிப்பிரிவினைகள்).

பரிகாரம் செய்யவேண்டிய காரியங்களைச் சரிசெய்தல்:

நீங்கள் திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன்கள் ஏதாகிலும் உண்டா? ஏதாகிலும் பொருட்களைத் திருடியிருந்து அவை அறிக்கை செய்யப்படவும், திருப்பிக் கொடுக்கப்படவும் வேண்டியதாயிருக்கிறதா? நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய குற்றங்கள் ஏதாகிலும் உண்டா?

ஒப்புரவாக வேண்டிய காரியங்களைக் கவனித்தல்:

யாரிடமாவது நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய தாயிருக்கிறதா? உங்களுக்கு எதிரான காரியங்களைச் செய்தவர்களை நீங்கள் மன்னிக்க வேண்டியதாயிருக்கிறதா? யாடமாவது நீங்கள் ஒப்புரவாக வேண்டியதாயிருக்கிறதா?

உதாரணமாக: உங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், வாழ்க்கைத்துணை, எஜமான் போன்றோர்.

உள்ளான காயங்களிலிருந்து விடுதலையடைதல்:

மற்றவர்களோ அல்லது உங்களுக்கு நீங்களோ உருவாக்கிக் கொண்ட காயங்கள் மனதினுள்ளே இன்னமும் மறைந்திருக்கின்றனவா?

உங்களைக் வேதனைப்படுத்தின அனைவரையும் மன்னித்துவிடுங்கள். உங்கள் மனதின் காயங்களைக் குணமாக்கும்படி தேவனிடம் ஜெபியுங்கள்.

வேதனையான நினைவுகள் அனைத்திலிருந்தும் தேவன் உங்களைக் குணமாக்கும்படி பரிசுத்த ஆவியானவரிடம் வேண்டுங்கள்.

உங்களை நியாயமற்ற முறையில் அல்லது கடினமாக நடத்தினவர்களிடம் நீங்கள் பழிவாங்கும் முறையில் நடந்து கொண்ட காரியங்களுக்காக மனந்திரும்புங்கள். சுயபரிதாபம், கசப்புகள், பயங்கள் மற்றும் சந்தேகம் போன்ற எதிர்மறையான காரியங்கள் அனைத்தையும் விட்டு விலகுங்கள்.

உங்கள் மனதின் காயங்கள் மிகவும் ஆழமானவையாக இருந்தால் நீங்கள் குணமடைவதற்காக உங்களோடு ஜெபிக்கும்படி உங்கள் போதகரிடம் கேளுங்கள். உடைந்த உள்ளங்களை இயேசு குணமாக்குவார்.

விடுதலையைப் பெற்றுக்கொள்ளுங்கள்:

சரீரப்பிரகாரமான வியாதிகள், மனநிலையில் குழப்பங்கள் அல்லது ஆவிக்குரிய கட்டுகள் போன்றவைகளை உங்களில் உருவாக்கி, நீங்கள் செய்ய விரும்பாத காரியங்களைச் செய்யும்படி உங்களைத் தூண்டுகிற எல்லாவிதமான அசுத்த ஆவிகளின் வல்லமைகளிலிருந்தும் முழுமையான விடுதலையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் போதகர் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கும்படி அவரிடம் கேளுங்கள். கட்டுண்டவர்களை இயேசு விடுதலையாக்குவார்.

No comments: