Saturday, June 19, 2010

Gospel3

வெளியே காலடி எடுத்து வைத்தல்

எபிரெயர் 6:1,2ல் கூறப்பட்டுள்ள அஸ்திபாரப் போதனைகளில் இது இரண்டாவது காரியமாகும்.

இது சுவிசேஷத்தைக் கேட்டபின் நாம் கொடுக்கும் மறுமொழியாகும்: ""தேவனிடமாக மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும் நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்'' என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். அப்போஸ்தலர் 20:21.

தேவனோடுள்ள நமது உறவுக்கு இதுவே அஸ்திபாரமாக அமைந்துள்ளது: ""விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமா யிருப்பது கூடாத காரியம், ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டு என்றும், தம்மைத் தேடுகிறவர் களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்''. எபிரெயர் 11:6.

""இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்ற கேள்விக்குக் கொடுக்கப்பட்ட மிக எளிமையான பதில்: ""கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி'' என்பதுதான். அப்போஸ்தலர் 16:30,31.

முழுமையான விசுவாசம் ஐந்து குணாதிசயங்களைக் கொண்டதாகும். அது: சரித்திரப்பூர்வமானது, அது தனிப்பட்ட ஒரு காரியம், அது ஒரு அறிக்கை, அது அனுபவப்பூர்வமானது, அது தொடர்ச்சியாகச் செயல்படும் ஒரு காரியம்.

விசுவாசம், அது சரித்திரப்பூர்வமானது

இரட்சிப்பிற்குரிய விசுவாசமானது ஏற்கெனவே நடந்த சரித்திரப்பூர்வமான உண்மைகளைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது. சரித்திரத்தின் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை விசுவாசிக்கும்படியாக நாம் அழைக்கப்படுகிறோம். இந்த உண்மைகளையே ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களும் குறிப்பிட்டுள்ளனர். ""நான் அடைந்ததும், உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால்: கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்'' என்று பவுல் 1 கொரிந்தியர் 15:3-5ல் கூறியுள்ளார்.

அப்போஸ்தலர்கள் குறிப்பிட்டுள்ள சரித்திரப்பூர்வமான காரியங்களை விசுவாசிப்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைகளாயிருக்கிறது.

விசுவாசம், அது தனிப்பட்ட ஒரு காரியம்

இயேசு கிறிஸ்துவைக்குறித்த நமது விசுவாசமானது அதன் பொருளின் அடிப்படையில் நமது தனிப்பட்ட வாழ்வுடன் தொர்புடைய ஒரு காரியமாயிருக்க வேண்டும். இயேசு மரித்தார், பின்பு உயிரோடு எழுந்தார் என்பதோடு கிறிஸ்தவ விசுவாசம் நின்றுவிடாமல் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி ஒரு தனிப்பட்ட தீர்மானத்திற்குள் நம்மை வழிநடத்தும்.

""இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்ற சிறைச்சாலை அதிகாரியின் கேள்விக்கு: ""கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்கிற தனிப்பட்ட முறையில் செய்யப்படவேண்டிய விசுவாசத்தின் முடிவைக்குறித்த பதிலையே பவுலும், சீலாவும் அவனுக்குக் கூறினர். அப்போஸ்தலர் 16:30,31.

இது விசுவாசமானது ஒரு தனிப்பட்ட காரியம் என்பதைக் குறிப்பிடுகிறது. தனிப்பட்ட முறையில் இயேசுவே என் ஆண்டவர், இரட்சகர் என்பதை ஒருவர் விசுவாசித்து, ஏற்றுக்கொள்ளாதவரையிலும் அவர் இரட்சிக்கப்படாத ஒரு நபராகவே இருப்பார்.

தேவன்மேலுள்ள நமது விசுவாசம் எந்த அளவு நேர்மையானது என்பதற்கு இதுவே ஒரு சரியான பரீட்சையாகும். ""...நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்'' (கலாத்தியர் 2:20) என்று உங்களால் கூற முடியுமா?

விசுவாசம், அது ஒரு அறிக்கையாகும்

அறிக்கை என்றால் நமது உள்ளத்தில் நாம் ஒப்புக்கொள்ளுகிற ஒரு காரியத்தை நமது வாயினாலே வெளியில் சொல்லுவதாகும். வேதாகமத்தின்படி தேவன் சொல்லுவதை நாம் விசுவாசித்து அதை வெளியரங்கமாகக் கூறுவதே அறிக்கையாகும். தேவன் நம்மை இரட்சிக்கும்படி நமது விசுவாசம் வெளியரங்கமாக அறிக்கை செய்யப்பட வேண்டுமென்று பவுல் கூறுகிறார்: ""... கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்தில் விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'' (ரோமர் 10:9,10).

விசுவாசமானது, தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவனுக்குமுன் நாம் செய்யும் அறிக்கைகள் நமது உள்ளங்களில் பக்திக்கேதுவான உணர்வுகளை உருவாக்கும். நமது வாயின் அறிக்கைகளின் மூலமாக நமது விசுவாசம் வெளிப்படும்போது தேவன் அதைக் கவனிக்கிறார். நமது விசுவாசத்தின் வார்த்தைகள் வல்லமையுள்ளவையாக மாறுகின்றன. நமது விசுவாச அறிக்கைகளைக் கேட்பவர்கள் விசுவாசிகளாயிருந்தால் தங்கள் விசுவாசத்தில் அவர்கள் பெலனடைவார்கள், அவிசுவாசிகளாயிருந்தால் விசுவாச த்தில் செயல்பட முன்வருவதற்குத் தூண்டப்படுவார்கள்.

விசுவாசம், அது அனுபவப்பூர்வமானது

செயல்முறையிலான விசுவாசமே இரட்சிக்கிறது. தெசலோனிக்கேய சபை விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தைக் கிரியையில் வெளிப்படுத்தியதற்காகப் பவுல் தேவனை ஸ்தோத்தரித்தார். 1 தெசலோனிக்கேயர் 1:3. கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு 2:17லிலும், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று யாக்கோபு 2:24லிலும் காண்கிறோம். யாக்கோபு ஆபிரகாமை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். ஆபிரகாம் தன் மகனைப் பலியாகக் கொடுக்கும்படி சோதிக்கப்பட்டபோது தேவன் மேலுள்ள அவரது விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. இதைப்பற்றி: ""ஆபிரகாமின் கிரியைகளோடேகூட விசுவாசம் முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டது'' என்று யாக்கோபு கூறுகிறார் (2:22). தேவனை விசுவாசிக்கும் விஷயத்தில் ஆபிரகாம் தனது முழு எதிர் காலமும் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று செயல்பட்டார். தேவனுக்குக் கீழ்ப்படிவதை வெளிப் படுத்தும்படி தங்கள் விசுவாசத்தைக் கிரியைகளில் வெளிப்படுத்திய ஆண் களையும், பெண்களையும் பற்றி ஒரு அதிகாரம் முழுவதிலும் எபிரெயர் நிருபத்தின் ஆக்கியோன் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் முன்னுதாரணங் களிலிருந்து நாம் கற்றுக் கொள் கிறோம். தேவனுடைய வார்த்தைக ளிலுள்ள உண்மைகளை ஒப்புக்கொள்வது மட்டும் விசுவாசமல்ல; அந்த உண்மைகளின் அடிப்படையில் செயல்படுவதே விசுவாசமாகும். விசுவாசத்தைச் செயல்முறையில் வெளிப்படுத்தும் விஷயத்தில்தான் பலரும் பிரச்சனைக்குள்ளாகின்றனர்.

விசுவாசம், அது தொடர்ச்சியாகச் செயல்படும் ஒரு காரியம்

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு எவ்வளவு நீண்ட காலங்களானாலும் சரி, விசுவாசமானது தேவனுடைய வார்த்தையின்மேல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் துவக்கத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்வின் எஞ்சியகாலம் முழுமைக்கும் நீங்கள் அவர்மேலுள்ள விசுவாசத்தில் தொடர வேண்டும்.

இவ்வுலக வாழ்வாகிய படியிலிருந்து நித்திய வாழ்வாகிய அடுத்த படிக்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு நடையே விசுவாசமாகும். வாழ்வின் எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவனுடைய கிருபை போதுமானது, நிகழ்காலம் வருங்காலம் எல்லாமே அதில்தான் அடங்கியிருக்கிறது என்று நாம் நம்பி முன்செல்ல முடியும்.

பாடத்தின் சுருக்கம்:

விசுவாசம் என்பது ஒரு உணர்ச்சியல்ல, அது இயேசு கிறிஸ்துவைக் குறித்து தேவனுடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ளவைகளை ஒப்புக்கொள்ளும் மனதின் ஒரு தன்மையாகும்.

தம்மை ஒரு நபராக விசுவாசிப்பதற்கும், தம்முடைய வார்த்தைகளை விசுவாசிப்பதற்கும் தேவன் நமக்கு உதவி செய்கிறார். இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் போன்ற சரித்திரப்பூர்வமான காரியங்களை நம்புவதும்; தேவனுடைய வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளவைகளை ஒப்புக்கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிவதும் விசுவாசத்தில் அடங்கியுள்ளது. விசுவாசத்தில் வாழவும், விசுவாசத்தில் நடக்கவும், நமது விசுவாசத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்தவ விசுவாசமானது ஒரு குணாதிசயமாகும்: விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது எபிரெயர் 11:1.

கிறிஸ்தவ விசுவாசமானது ஒரு செயல் அல்லது கிரியையாகும்: ...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம். எபிரெயர் 12:1.

உங்கள் தனிப்பட்ட மறுமொழி

உங்கள் கிறிஸ்தவ வாழ்வை நீங்கள் துவங்கும்போது உங்களிலுள்ள விசுவாசமானது கீழ்க்கண்ட காரியங்களுடன் தொடர்புடையதாயிருக்கிறது:

விசுவாசித்தல்: இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன், இரட்சிப்பின் ஒரே வழி, இஸ்ரவேலின் மேசியாவாக தேவனால் அனுப்பப்பட்டவர் என்று விசுவாசிக்க வேண்டும்: 1 யோவான் 4:9,10; அப்போஸ்தலர் 4:12; யோவான் 4:22.

நம்புதல்: உங்களுடைய கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை இரட்சிப்பதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்: 1 யோவான் 1:8,9,10; 2:1,2. பாவங்களுக்குரிய நிவாரணம் அல்லது பரிகாரமாகவே இயேசு சிலுவையில் மரித்தார். உங்கள் பாவங்களுக்குரிய தண்டனையை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார். நீங்கள் தேவனை எதிர்த்து நின்றதற்கும், தேவனுடைய பிரமாணங்களை மீறியதற் குமுரிய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டபடியால், உங்கள் பாவங்களுக்குரிய மன்னிப்பையும், தேவனுடைய அங்கீகரிப்பையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்: எபே. 1:7,8.

அறிக்கையிடுதல்: இயேசு ஜீவிக்கிறார், அவர் உங்கள் வாழ்வின் ஆண்டவராக இருக்கிறார், புது சிருஷ்டிகளான ஒரு மக்கள் கூட்டத்திற்கு அவர் தலைவராக இருக்கிறார் என்பதை அறிக்கையிட வேண்டும்: ரோமர் 10:9,10.

ஏற்றுக்கொள்ளுதல்: பாவ மன்னிப்பு, நித்திய ஜீவன் ஆகியவற்றைத் தேவனிடமிருந்து இலவச ஈவாக அல்லது பரிசாகப் பெற்றுக்கொள்ளுதல்.

அர்ப்பணித்தல்: நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் அடிப்படையில் உங்கள் முழு வாழ்வையும் தேவனிடம் அர்ப்பணித்தல்: ரோமர் 1:5; கலாத்தியர் 2:20.

வீட்டுப் பாடம்:

நீங்கள் வளரும்படி தேவனுடைய வார்த்தை உதவிசெய்கிறது:

தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டு, அதில் வளரமுடியும். வேத வாக்கியங்க ளெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும் படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்துதலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 1 தீமோத்தேயு 3:14...17; ரோமர் 10:16,17.

வேதாகமத்திலிருந்து பலனடைதல்

வேதாகமத்திலிருந்து பலனடைவதற்குரிய ஐந்து வழிகள்.

1. அதைத் தியானியுங்கள்: ஒன்று அல்லது பல முறைகள் ஒரு குறிப்பிட்ட வேதபகுதி அல்லது அதிகாரத்தை வாசியுங்கள். வேதாகமத்திலிருந்து தனிப்பட்ட முறையில் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு பேசும்படி இடமளியுங்கள், அப்போது தேவனோடுள்ள உங்கள் உறவு வ�ர்ச்சியடையும். வேதவாக்கியங்களை அதிகமாக மனப்பாடம் செய்வது நல்லது. யோசுவா 1:8; சங்கீதம் 1:2,3.

2. அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்: வேதாகமத்தைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றுங்கள். கற்றுக்கொள்வதின்மூலம் வேதாகமத் தைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். உங்கள் மனதை நீங்கள் புதிதாக்க வேண்டும். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவைகளின் அடிப்படையிலல்ல, வேதாகமத்தின் அடிப்படையிலேயே உங்கள் சிந்தனைகள் அமைந் திருக்க வேண்டும். இந்த உலகத்தின் வேஷங்களோடு ஒத்துப்போகாதிருங்கள்! ரோமர் 12:2.

3. அதை ஏற்றுக்கொள்ளுங்கள்: வேதாகமத்தில் சொல்லப் பட்டுள்ள அனைத்தும் தேவனுடைய சத்தியங்கள் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது உங்கள் விசுவாசம் பெலமடைவதுடன், வளரவும் துவங்கும். உங்களுக்கு வரும் சோதனைகளில் நீங்கள் உறுதியாயிருப்பதுடன், உங்கள் தீர்மானங்களை ஞானமாகச் செய்வீர்கள். மத்தேயு 7:24,25; 1 பேதுரு 1:23 முதல் 2:23 வரை.

4. அதின்படி செய்யுங்கள்: வேதாகமத்தில் சொல்லப் பட்டுள்ளபடி நீங்கள் செய்யாமலேயே வேதம் உங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று எண்ணிக் கொள்வதின் மூலம் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். வேதாகமத்தின்படி செய்யும் போதுதான் நீங்கள் ஆசீர்வாதமடைவீர்கள். யாக்கோபு 1:22-25.

5. வேத வார்த்தைகளைப் பேசுங்கள்: துதிப்பதையும், ஜெபிப்பதையும்போல வேத வசனங்களிலுள்ள வாக்குத்தத்தங்களை சத்தமாக தேவனிடம் நீங்கள் பேசலாம். வேத வசனங்களை தேவனோடும், நமக் குள்ளேயும் பேசுவது சாதகமான ஒரு அறிக்கையாகும்; அது சோர்வுகள், சந்தேகங்கள், மனபாரங்களிலிருந்து உங்களை விடுதலை செய்யும்.

மத்தேயு 4:10,11ல் இயேசு சாத்தானிடம் வேதவசனங்களைப் பேசியதுபோல நீங்களும் பேசலாம்.

விசுவாசத்தில் வெளியே காலடி எடுத்துவைத்தல்:

எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது தேவை நீங்கள் விசுவாசத்தில் காலடி எடுத்துவைத்து முன்செல்லும்படி தூண்டுகிறது? உதாரணமாக: சுகம் தேவைப்படும் ஒரு வியாதி, செலுத்தப்பட வேண்டிய ஒரு தொகை, அடைய வேண்டிய ஒரு வேலை, விலக்கப்பட வேண்டிய ஒரு கெட்ட பழக்கம், நீங்கள் ஏற்றுக்கொள்ள முன்வரும்படி தேவன் உங்கள்மேல் வைக்க விரும்பும் ஒரு பொறுப்பு போன்றவைகள்.

நீங்கள் ஜெபிப்பதற்கு ஆதாரமாகவும், உங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்வதற்கும் சரியான வேதவசனங்களைக் கண்டுபிடியுங்கள்.

இக்குறிப்பிட்ட காரியங்களைக் குறித்து இன்னொரு கிறிஸ்தவருடன் சேர்ந்து ஜெபிப்பதற்கு முயற்சியுங்கள்.

No comments: